கொடிவேரி அணையில் தடையை மீறி சென்ற 5 பேர் கைது

கோபி, பிப்.20:  கோபி அருகே உள்ள கொடிவேரி அணை சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை. இந்த அணை சுமார் 750 மீட்டர் நீளமும், 15 அடி உயரமும் உள்ளதாலும், அணையில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதாலும் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

அணையில் இருந்து மணல் போக்கி வழியாக தண்ணீர் வெளியேறும் இடத்தில் சுமார் 100 அடி சுற்றளவில் 20 அடி ஆழம் உள்ளதால், அந்த பகுதிக்கு குளிக்க செல்லும் வெளியூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சுழலில் சிக்கி பலியாகி வருகின்றனர். இதனால், அணையின் ஆபத்தான பகுதி மற்றும் அருகில் உள்ள தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் உள்ளிட்ட பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல கடத்தூர் காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்து உள்ளனர். இந்நிலையில், நேற்று தடையை மீறி தடப்பள்ளி வாய்க்கால் பகுதிக்கு சென்ற திருப்பூரை சேர்ந்த ரமேஷ் மகன் திணேஷ் (18), மோகன்குமார் மகன் தர்ஷன் (19), சத்தியமூர்த்தி மகன் கிருத்திக் (19), முருகன் மகன் திவாகர் (18), மோகன் மகன் ரகு (18) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கொடிவேரி அணையில் உயிர் பலியை தடுக்க போலீசார் காவல்துறையினர் பதிவு செய்துள்ள முதல் வழக்கு இது. இதுகுறித்து போலீசார் கூறுகையில்,`வாய்க்கால் பகுதி மட்டுமல்ல, அணை பகுதியிலும் குடிபோதையில் வருபவர்கள், அணைக்குள் செல்பி எடுப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள்’ என்றனர்.

Related Stories: