கடும் வறட்சியால் பயிரைக் காப்பாற்ற லாரி தண்ணீரை வாங்கி பாய்ச்சும் விவசாயிகள்

பவானி, பிப். 20:  பவானி அருகேயுள்ள மைலம்பாடி ஊராட்சிப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் விவசாயிகள் தங்கள் சாகுபடி பயிரை காப்பாற்ற லாரியில் தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சி வருகின்றனர்.  மைலம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை காலம் தொடங்கும் முன்பே கடும் வறட்சி நிலவுகிறது. மேட்டுப்பாங்கான நிலங்களை அதிகம் கொண்ட இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 1,000 அடிக்கும் கீழே சென்றதோடு, ஆங்காங்கே உள்ள ஆழ்குழாய் கிணறுகளும் வறண்டு கிடக்கிறது.

இதனால், இப்பகுதியில் குடிநீர் பிரச்னை நிலவுகிறது.

இந்த நிலையில், ஆழ்குழாய் கிணற்று நீரை நம்பி விவசாயத்தைத் துவங்கிய பலர், தற்போது தண்ணீர் வற்றியதால் சாகுபடி பயிரை காப்பாற்ற வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.

மைலம்பாடி பகுதியில் குறுகிய காலப் பணப்பயிரான 100 நாட்களில் விளையும் புகையிலை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பயிர் நடவு முடிந்து சுமார் 50 நாட்கள் ஆன நிலையில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் மீதமுள்ள 50 நாட்கள் தாக்குப்பிடித்து காப்பாற்ற விவசாயிகள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால், ஒரு லாரி தண்ணீரை ரூ.1100 வாங்கி புகையிலைக்கு பாய்ச்சி வருகின்றனர். மைலம்பாடி அருகேயுள்ள சடையகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி மருது கவுண்டர், ஈஸ்வரி ஆகியோர் கூறுகையில்,`சுமார் இரண்டரை ஏக்கர் நிலத்தில் புகையிலை சாகுபடி செய்துள்ளோம். தற்போது ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் வற்றியதால் போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால், டேங்கர் லாரியில் தண்ணீரை வாங்கி வறட்சியால் வாடி வரும் புகையிலைக் காக்க பாய்ச்சி வருகிறோம்.

ஒரு டேங்கர் லாரி ரூ.1100 வீதம் சுமார் 10 லாரிகளில் தண்ணீர் பாய்ச்சும் நிலை உள்ளது.

100 நாட்கள் சாகுபடி பயிரான புகையிலை தற்போது 50 நாட்களைக் கடந்துவிட்டது. அதற்குள் ஒரு மழை பெய்தாலும் விளைச்சல் காலம் முடிவடைந்து அறுவடை தொடங்கிவிடும். அதுவரை, சாகுபடி பயிரினை காக்க கூடுதல் செலவு செய்வது கட்டாயமாக உள்ளது. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Related Stories: