மின்கம்பமே இல்லாமல் மாறும் பெருந்துறை 6 கோடியில் புதைவடம் அமைக்கும் பணி தீவிரம்

பெருந்துறை, பிப்.20:  ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருந்துறை பேரூராட்சி மற்றும் கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி பகுதிகளில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் 30 கி.மீ. நீளத்திற்கு புதைவடம் அமைப்பதற்கான துவக்க பணிகள் குன்னத்தூர் ரோடு பெத்தாம்பாளையம் பிரிவில் நடந்தது.

விழாவிற்கு ஈரோடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன்  தலைமை வகித்தார். பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், ஈரோடு கலெக்டர் கதிரவன் ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர்.

விழாவில் எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் பேசுகையில்,`தமிழகத்தில் இதுவரை மாநகராட்சி பகுதிகளில் மட்டுமே மண்ணுக்கு அடியில் கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லும் பணி நடந்து வந்தது. தற்போது, முதன்முறையாக பெருந்துறை பேரூராட்சியில் இப்பணி நடக்கிறது.

ஏற்கனவே, பெருந்துறை நகர்பகுதி மெயின் ரோட்டில் சாலையை அகலப்படுத்தி, சாலை நடுவே ரூ.1.25 கோடி பாராளுமன்ற உறுப்பினரின் நிதியில் அதிஉயரமான மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மழை காலங்களில் மின் விபத்தால் ஏற்படும் சேதங்கள் இதன் மூலம் தவிர்க்கப்படும்’ என்றார்.

விழாவில், பெருந்துறை மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், மாவட்ட துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார், பெருந்துறை ஒன்றிய கழக செயலாளர் விஜயன்,  கட்சி நிர்வாகிகள், மின்சாரதுறை பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: