டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை தொகை வழங்க வலியுறுத்தல்

ஈரோடு, பிப். 20:  டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை தொகையை வழங்க தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை உடனடியாக அமல்படுத்தி நிலுவை தொகைகளை வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் பொன் பாரதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், வார விடுமுறை, மிகை நேர ஊதியம், தேசிய மற்றும் பண்டிகை விடுமுறைகளில் வழங்காமல் டாஸ்மாக் நிர்வாகம் ஊழியர்களை வஞ்சித்து வந்தது.

இதனால், வார விடுமுறை நாட்கள் மற்றும் தேசிய, பண்டிகை தினங்களில் பணியாற்றியதற்கான இரட்டிப்பு சம்பளம், 8 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றியதற்காக மிகை நேர ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த பணப்பலன்களை 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு கணக்கீடு செய்து வழங்க கோரி டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர்கள் 229 பேர் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம்(சிஐடியு) சார்பில் சென்னை 3வது கூடுதல் தொழிலாளர் நீதிமன்றத்தில் கடந்த 2010ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை கடந்த 6ம் தேதி விசாரித்த தொழிலாளர் நீதிமன்றம், மேற்பார்வையாளர்களுக்கு தலா ரூ. 4லட்சத்து 57ஆயிரத்து 512ம், விற்பனையாளர்களுக்கு தலா ரூ. 2லட்சத்து 94ஆயிரத்து 669ம், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்து 995ம் என மொத்தம் 6 கோடியே 12 லட்சத்து 60 ஆயிரத்து 448 ரூபாயை 3 மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவினை தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் உடனடியாக அமல்படுத்தி, ஊழியர்களுக்கு நிலுவை தொகையை விரைந்து வழங்க வேண்டும் என சிஐடியு சார்பில் தமிழக அரசுக்கு வலியுறுத்துகிறோம்.  மேலும், 2010ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான இதேமாதிரியான ஊதிய நிலுவை தொகையை வழங்க அரசு நடவடிக்கை வேண்டும். இனி வரும் காலங்களில் ஊழியர்களின் மாத சம்பளத்துடன் இத்தொகைகளை சேர்த்து வழங்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அறிக்ைகயில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: