அண்ணா பேருந்து நிலையத்திற்கு நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

வாடிப்பட்டி, பிப்.20: வாடிப்பட்டியிலிருந்து அண்ணா பேருந்து நிலையத்துக்கு செல்ல நிறுத்தப்பட்ட அரசு பஸ் சேவையை, மீண்டும் இயக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாடிப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளான செம்மினிப்பட்டி, விராலிப்பட்டி, கச்சைகட்டி, எல்லையூர், குட்லாடம்பட்டி, ராமையன்பட்டி, பூச்சம்பட்டி, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட ஏனைய கிராமமக்கள் நாள்தோறும் வருவாய் துறை சம்பந்தப்பட்ட பணிகளுக்காக கலெக்டர் அலுவலகத்திற்கும், மருத்துவ மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கும் அதிகளவில் செல்வார்கள். இவர்கள் எளிதாக பயணம் மேற்கொள்ளும் வகையில் முன்பு வாடிப்பட்டியில் இருந்து அண்ணா பேருந்து நிலையத்திற்கு 71ஏ என்ற வழித்தடத்தில் நேரடி பேருந்து வசதி இருந்தது. இதனால் பொதுமக்கள் சிரமம் இன்றி கலெக்டர் அலுவலகமோ, மருத்துவமனையோ சென்று வந்தனர்.

ஆனால் பல மாதங்களுக்கு முன்பு அண்ணா பேருந்து நிலையத்திற்கு செல்ல நேரடி பேருந்து வசதி நிறுத்தப்பட்டது. இதனால் வாடிப்பட்டி பகுதி மக்கள் மருத்துவமனைக்கோ அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கோ செல்ல வேண்டுமானால் வாடிப்பட்டியிலிருந்து பெரியார் சென்று அங்கிருந்து வேறு பேருந்து மாறி செல்ல வேண்டும். இல்லையெனில் வாடிப்பட்டியிலிருந்து மெபசல் பேருந்தில் ஏறி கோரிப்பாளையம் சென்று பின் அங்கிருந்து வேறு பேருந்தில் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் கிராமப்புற மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே வாடிப்பட்டியிலிருந்து அண்ணா பேருந்து நிலையத்திற்கு வாடிப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் எளிதில் பயணிக்கும் வகையில், நிறுத்தப்பட்ட நேரடி பேருந்து வசதியினை மீண்டும் ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: