கால்நடை சிகிச்சைக்கு 8 கி.மீ நடைபயணம்

திருமங்கலம், பிப்.20: திருமங்கலத்தை அடுத்த சித்தாலை கிராமமக்கள் தங்களது கால்நடைக்கு சிகிச்சையளிக்க 8 கிலோ மீட்டர் துாரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. திருமங்கலம் ஒன்றியம் சித்தாலை கிராமத்தின் முக்கிய தொழிலே ஆடு, மாடு, கோழி வளர்ப்பாகும். இங்கு நூற்றுக்கணக்கான கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. ஆனால் கால்நடை மருத்துவமனை மட்டும் இந்த கிராமத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சாத்தங்குடியில் அமைந்துள்ளது. இதனால் நோயுற்ற கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கிராமமக்கள் சுமார் 8 கிலோ மீட்டர் கால்நடைகளையும் அழைத்து செல்லவேண்டியுள்ளது. இதேபோல் மீண்டும் திரும்பி அழைத்து செல்ல வேண்டியுள்ளது.

ஆடு, மாடு உள்ளிட்டவைகளை கால்நடையாகவே மருத்துவமனைக்கு அழைத்து செல்வதால் நோயின் தாக்கம் அதிகரித்து பல சமயங்களில் அவை உயிரிழந்து விடுகின்றன. எனவே கால்நடைகள் அதிகமுள்ள சித்தாலை கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அல்லது மருத்தகத்தையாவது அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இக்கிராம பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: