9 அம்ச கோரிக்கை நிறைவேற்றாததால் பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

மதுரை, பிப்.20:  மதுரையில் 9அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் கடத்துவதால் மத்திய அரசை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்களின் 2ம் நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று நடந்தது. பிஎஸ்என்எல் மூலம் 4ஜி சேவையை வழங்க வேண்டும். கடந்த 1.1.2017 முதல் 15சதவிகிதம் பிட்மென்ட் உடன் 3வது ஊதிய மாற்றம் வழங்க வேண்டும். பென்சன் மாற்றம் மற்றும் அரசு விதிப்படி பென்சன் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பிஎஸ்என்எல்லின் நில மேலாண்மை ெகாள்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். சொத்துக்களை மாற்றி தருவதை விரைந்து முடித்துக்கொடுக்க வேண்டும். மொபைல் டவர்களை பராமரிக்கும் பணிக்கு அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். இது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எட்டப்பட்டது.

ஆனால் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தியது. இதையடுத்து மத்திய அரசை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை துவக்கினர். மதுரையில் 2ம் நாள் வேலை நிறுத்தப்போராட்டம் நேற்று நடந்தது. பிஎஸ்என்எல் ஊழியர்கள் நேற்றும் அலுவலகத்திற்கு செல்லாமல் புறக்கணித்ததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் நிர்வாகிகள் செல்வின் சத்தியராஜ், ராஜேந்திரன், அகமதுயூனுஸ்,  அருணாச்சலம் மற்றும் டிஇபியு மாநில இணைச்செயலாளர் அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: