குஜிலியம்பாறை அருகே ஒரேநாள் இரவில் 2 கோயில்களின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

குஜிலியம்பாறை, பிப். 20: குஜிலியம்பாறை அருகே ஒரேநாள் இரவில் வெவ்வேறு இடங்களில் 2 கோயில்களின் பூட்டை உடைத்து உண்டியல் பணம், பூஜை சாமான்களை மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜிலியம்பாறை அருகே கரிக்காலி ஆதிதிராவிடர் காலனியில் மேட்டு பெருமாள் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இக்கோயில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் அங்கிருந்த உண்டியலையும் உடைத்து அதிலிருந்த பணம், பித்தளை குத்துவிளக்கு பெரியது 4, சிறியது 2, கும்பம், பித்தளை பூஜை சாமான்கள், மைக்செட் ஆம்பிளிபயர் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.

மறுநாள் காலை திருமண நிகழ்ச்சிக்காக கோயிலுக்கு சென்ற அப்பகுதி மக்கள் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது கோவில் சாமான்கள் திருடு போனது தெரியவந்தது. திருடு போன உண்டியல் பணம், பூஜை சாமான்கள் மதிப்பு ரூ.60 ஆயிரம் என தெரிகிறது.

இச்சம்பவம் நடந்த அன்றிரவே குஜிலியம்பாறை அருகே உல்லியக்கோட்டை கிராமம் முத்தம்பட்டி வடக்கே உப்பிலியபட்டியில் உள்ள மாயவன் பெருமாள் கோவில் பூட்டை உடைத்து அங்கிருந்த பித்தளை குத்துவிளக்கு 2, பித்தளை சரம் விளக்கு 2, காசி செம்பு, கும்பம் உள்ளிட்ட பித்தளை பூஜை சாமான்கள் மற்றும் கோயில் செலவிற்காக ஒரு வருடமாக எடுக்காமல் இருந்த உண்டியல் பணம் உள்ளிட்டவைகளை திருடி சென்றனர். இதன்மதிப்பு ரூ.1 லட்சம் என தெரிகிறது. இரு தரப்பினர் கொடுத்த புகாரின்பேரில், குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரேநாள் இரவில் வெவ்வேறு இடங்களில் நடந்துள்ள இத்திருட்டு சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Related Stories: