ேவடசந்தூர்- கோவிலூர் சாலையில் மந்தமாக நடக்கும் பால பணி வாகனஓட்டிகள் அவதி

வேடசந்தூர், பிப். 20: வேடசந்தூர்- கோவிலூர் சாலை விரிவாக்கத்தில் பாலப்பணி மந்தகதியில் நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. வேடசந்தூர்- கோவிலூர் செல்லும் சாலை 6 மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. இதில் கோவிலூர் வரை உள்ள இச்சாலை முழுமையாக சேதமடைந்து குறுகியதாக இருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் வேடசந்தூர் மார்க்கெட் ரோட்டில் இருந்து கோவிலூர் வரை சாலையை விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இவ்வழியே பாலங்கள் உள்ள இடங்களில் சாலை அமைக்காமல் மற்ற இடங்களில் சாலைகள் அமைத்தனர்.

இந்நிலையில் சாலை அமைத்து 6 மாதங்களுக்கு மேலான நிலையில் தற்போது கோவிலூர் சாலையில் பாலங்களை அகலப்படுத்தும் பணியை துவங்கி உள்ளனர்.

இதில் வேடசந்தூர் மார்க்கெட் சாலையில் இருந்து கோகுல்நகர் வரையும், ராமநாதபுரம் அருகிலிருந்து கோவிலூர் சந்தை முன்பு வரையும் இதுவரை சாலை அமைக்காமல் உள்ளனர். காரணம், இடைப்பட்ட தூரத்தில் பாலம் அமைக்கும் பணிகள் ஆமைவேகத்தில் நடந்து வருவதுதான். இதனால் அவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலப்பணியை விரைவில் முடித்து சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: