இடைத்தரகர்கள் இடையூறு இனி இருக்காது விலையிழப்புகளில் சிக்கி தவித்ததை தடுக்க வந்தது ஆன்லைன் சந்தை கைநிறைய லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல், பிப். 20: இடைத்தரகர்களால் ஏற்படும் விலை இழப்புகளை தவிர்க்க கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் சந்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உரிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வகை பயிர்கள் பரவலாக விளைந்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானல் பகுதியில் பீன்ஸ், கேரட், பூண்டு மற்றம் சிறுமலை பகுதியில் மலைவாழை, குஜிலியம்பாறையில் சின்னவெங்காயம், வேடசந்தூர் பகுதியில் முருங்கைக்காய், ஆயக்குடியில் கொய்யாப்பழம், நத்தம் பகுதியில் மாம்பழம் உள்ளிட்டவை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வேடசந்தூர் பகுதியில் உணவுப்பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசிற்கு திட்ட அறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பயறு வகை விளைபொருட்களுக்கு அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் இல்லாததால் இடைத்தரகர்களின் பிடியில் விவசாயிகள் சிக்கியுள்ளனர். இதனால் தரத்திற்கேற்ப கட்டுபடியான விலையும் கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் பலரும் பயறு வகை பயிர்களை உற்பத்தி செய்ய சுணக்கம் காட்டி வருகின்றனர். தேவைக்காக பயறுவகைகளை இறக்குமதி செய்வதால் அந்நிய செலாவணி அதிகளவில் செலவிடப்படுகிறது. இதுகுறித்த தகவல் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து பயறுகளின் உற்பத்தியினை பெருக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

மத்தியஅரசு உதவியோடு தமிழக அரசானது நடப்பு ராபி பருவத்தில் அறுவடை செய்யப்படும் பயறு வகைகளை தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களின் மூலம் ஆதாரவிலை திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படும் என்று அரசிதழில் வெளியிட்டது. இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வரும் திண்டுக்கல், பழநி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கொடைக்கானல்-கவுஞ்சியில் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்க வேளாண் பொருட்களை ஆன்லைன் மூலம் விற்க ‘இ நாம்’ தேசிய வேளாண் விற்பனை சந்தையை அரசு துவங்கியது. இதன்மூலம் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களுக்கு தேவை எங்கு அதிகம் உள்ளது. எவ்வளவு நாளுக்கு இது நீடிக்கும் என்பது உள்ளிட்ட தகவல்களை அறியலாம். இதில் விவசாயிகளுடன் வியாபாரிகள் இணைக்கப்படுவர்.

தேசிய அளவி–்ல் 585 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும், தமிழகத்தில் 30 கூடங்களுடன் இது இணைக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் இ-நாம் இணையதளத்தில் சென்று எந்த விளைபொருட்கள் எங்கு கிடைக்கும், தேவையான அளவு இருப்பு உள்ளதா, என்ன விலையில் எங்கு கிடைக்கும், தரம் என்ன உள்ளிட்ட பல்வேறு விபரங்களை தெரிந்து கொள்ளலாம். கொள்முதல் செய்ய விரும்பினால் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் சந்தைக்கு திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இதுவரை இந்த சந்தையில் 2 ஆயிரத்து 361 விவசாயிகள், வணிகர்கள், வியாபாரிகள் இணைந்துள்ளனர், வாழைப்பழம் 28 குவிண்டால் ரூ.14 ஆயிரத்து 400க்கும், பருத்தி 7 ஆயிரத்து 767 குவிண்டால் ரூ.3.57 கோடிக்கும், நிலக்கடலை 15 ஆயிரத்து 553 குவிண்டால் ரூ.4.49 கோடிக்கும், வெங்காயம் 198 குவிண்டால் ரூ.3.79 லட்சத்திற்கும் என பல்வேறு பொருட்கள் விற்பனை ஆகியுள்ளன. இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பதால் சரியான விலை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆய்வுப்பணிகள் நடைபெற்றது. அப்போது வேளாண்மை இணை இயக்குநர் மனோகரன், விற்பனைக் குழு செயலாளர் சந்திரசேகர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: