ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி கூட்டம்

திண்டுக்கல், பிப். 20: காஷ்மீரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இவர்களுக்கு திண்டுக்கல் கல்லறை தோட்டத்தில் மாவட்ட முன்னாள் ராணுவவீரர்கள், வீர மங்கையர்கள் நலச்சங்கம் சார்பில் நேற்று அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர்கள் ராஜூ, அழகேசன் தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர்கள் குமாரசாமி, ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் அல்போன்ஸ் தேவராஜ், காலமேகம் முன்னிலை வகித்தனர். லெப் கர்னல் ஜெயராஜ், லெப் கமாண்டர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி, பயங்கரவாதிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து நமது தாய்நாட்டின் ஸ்திரத்தன்மையையும், ஒற்றுமையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ராணுவத்திற்கு முழு ஒத்துழைப்பு தரும் வகையில் நாங்கள் தாமாகவே முன்வந்து பணியாற்ற வருகிறோம் என அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

*பழநி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் மல்லிகா தலைமை வகித்தார். மாணவ, மாணவிகள் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில் ஆசிரியர்கள் சண்முகராஜன், புனிதவதி, சண்முகப்பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். *வத்தலக்குண்டுவில் பசுமை வதிலை இயக்கம், சமூகஆர்வலர்கள் சார்பில் நடந்த ஊர்வலத்திற்கு சமூகஆர்வலர் சிதம்பரம் தலைமை வகிக்க, இயக்குனர் மருதராஜன் துவக்கி வைத்தார். கணவாய்பட்டி ரோடு, பெரியகுளம் ரோடு, காவல்நிலையம் வழியாக பஸ்நிலையத்தை வந்தது. அங்கு வீரமரணமடைந்த ராணுவவீரர்கள் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் சமூக ஆர்வலர்கள் கோபால், பண்ணைகோமகன், சின்னா, தங்கப்பாண்டி, இயக்க நிர்வாகிகள் செல்வபாண்டியன், தங்கராசு, ராமமூர்த்தி, தங்கப்பாண்டி, ராஜா, ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: