பட்டிவீரன்பட்டியில் குப்பைக்கு தீ வைப்பால் சுவாச நோய் அபாயம்

செம்பட்டி, பிப். 20: பட்டிவீரன்பட்டியில் குப்பைகளை அகற்றாமல் அங்கேயே தீ வைத்து எரிப்பதால் பொதுமக்களுக்கு சுவாச நோய்கள் ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது. பட்டிவீரன்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 7வது வார்டு மற்றும் அய்யம்பாளையம் சாலைகளில் குப்பைகள் மலைபோல் தேங்கி கிடந்தன.

இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியதோடு, பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தொடர் புகாரால் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதுபோல் முன் வந்தது.

ஆனால் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து உரக்கிடங்கிற்கு அனுப்பாமல் அங்கேயே தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால் தற்போது காற்று மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தவிர, குப்பைகளுடன் பிளாஸ்டிக் கழிவுகளையும் எரிப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு பொதுமக்களுக்கு சுவாசம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை தீ வைத்து எரிக்காமல் முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: