தண்ணீர் பிடிக்க இவ்வளவு சிரமமா? ஒருபக்கம் கழிவுநீர் ‘கப்’ மறுபக்கம் பயமுறுத்தும் பள்ளம் ஆத்தூரின் அவலமிது

செம்பட்டி, பிப். 20: ஆத்தூர் நந்தனார்தெருவில் தண்ணீர் தொட்டி அருகே கழிவுநீர் கால்வாய் தூர்நாற்றம், மூடப்பட்ட கற்கள் பெயர்ந்து கிடப்பதால் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் புலம்புகின்றனர். ஆத்தூர் ஊராட்சிக்குட்பட்டது நந்தனார் தெரு. இங்கு சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக மின்மோட்டார் வசதியுடன் தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இத்தொட்டி அருகே கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. தற்போது வாய்க்காலை மூடியிருந்த கற்கள் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் தொட்டியில் தண்ணீர் பிடிக்க வரும் பெண்கள் சிலசமயம் தடுமாறி கழிவுநீர் கால்வாயில் விழுந்து காயமுறுகின்றனர். மேலும் சுகாதாரமற்ற நிலையில் கால்வாயில் கழிவுகள் தேங்கி கிடப்பதால் கொசுக் கள் பல்கி பெருகின்றன.

இதனால் தண்ணீர் பிடிக்க வருபவர்கள் கொசுக்கடிக்கு ஆளாவதோடு, தேள், பூரான் உள்பட விஷஜந்துகளின் கடிக்கும் ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயின் கற்களை சரிசெய்வதுடன் சுகாதாரமான முறையில் தண்ணீர் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: