அரக்கோணம் அடுத்த கிருஷ்ணாம்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்: வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

அரக்கோணம், பிப்.20: அரக்கோணம் அடுத்த கிருஷ்ணாம்பேட்டை பகுதியில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் திடீரென பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அதிகாரிகள் கால்வாயை சரிசெய்து ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர். அரக்கோணம் நகராட்சி கிருஷ்ணாம்பேட்டை பகுதியில் உள்ள கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் கழிவுநீர் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். அதேபோல், நேற்று காலையும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலை 10 மணியளவில் அரக்கோணம்- ஓச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த அரக்கோணம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் அருள்தாஸ், டவுன் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் ேபச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், ‘அடிக்கடி கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. மேலும், குடிநீரில் கழிவுநீர் கலந்துவிடுவதால் குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு ஏற்படுகிறது'''' என ஆவேசமாக தெரிவித்தனர்.

அதற்கு அதிகாரிகள், கால்வாயை தூர்வார உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து நகராட்சி ஆணையாளர் பொறுப்பு சண்முகம் உத்தரவின்பேரில் கிருஷ்ணாம்பேட்டை பகுதியில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை ஊழியர்கள் சரிசெய்தனர். மேலும், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.

Related Stories: