சார்பதிவாளர் அலுவலகங்களில் 2 நாட்களில் பிஓஎஸ் கருவி மூலம் ரூ.36 லட்சம் கட்டணம் வசூல்: பதிவுத்துறை ஐஜி தகவல்

சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களில் பிஓஎஸ் கருவி மூலம் கடந்த 2 நாட்களில் ரூ.36 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது, என்று பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் தெரிவித்தார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் பத்திரம் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம், ரூ.1000க்கும் மேல் ரொக்கமாக வசூலிக்க கூடாது என்ற உத்தரவு ஏற்கனவே நடைமுறையில்  உள்ளது. ஆனால், இந்த நடைமுறையை பின்பற்றாமல் லட்சக்கணக்கில் ரொக்கமாக பணம் பெறப்படுவதாக கூறப்படுகிறது. இதில், கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் புழங்குவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து அப்போது பதிவுத்துறை ஐஜியாக இருந்த குமரகுருபரன் பணம் இல்லாத பரிவர்த்தனை கொண்டு வர நடவடிக்கை எடுத்து  வருகிறார். அதன்படி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வாயிலாக கட்டணம் வசூலிக்கும் வகையில் எஸ்பிஐ வங்கி மூலம் பிஓஎஸ் கருவி நிறுவப்பட்டது.

தமிழகம் முழுவதும் 575 அலுவலகங்களுக்கு தலா 1 வீதம் பிஓஎஸ் கருவி வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவிகள் மூலம் பிப்ரவரி 18ம் தேதி முதல் பதிவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜியாக இருந்த  குமரகுருபரன் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இந்த திட்டம் நேற்றுமுன்தினம் முதல் அமலுக்கு வந்தது. அதன்படி அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் டெபிட், கிரெடிட் கார்டுகளை பெற்று பிஓஎஸ் கருவி மூலம் பணம் வசூலிக்கப்பட்டது. மேலும், அந்த  கட்டணம் வசூலித்ததற்கான ரசீதை சார்பதிவாளர்களிடம் இருந்து பொதுமக்கள் பெற்று கொண்டனர். முதல் நாளில் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில்  ₹26 லட்சத்து 45 ஆயிரத்து 371ம் கட்டணம், இரண்டாவது நாளில் ₹9  லட்சத்து 48 ஆயிரத்து 997 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் தெரிவித்தார்.

Related Stories: