கோப்புகளில் கையெழுத்து போடாமல் ஒப்பந்ததாரர்களை அலைக்கழிக்கும் தாம்பரம் நகராட்சி பொறியாளர்: பணிகளுக்கு பெரும் தொகை கேட்பதாக புகார்

தாம்பரம்: செய்த பணிகளுக்கு கோப்புகளில் கையெழுத்து போடாமல் தாம்பரம் நகராட்சி பொறியாளர்கள் அலைக்கழிப்பதாக ஒப்பந்ததாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி தாம்பரம் நகராட்சி பகுதிகளில் அவசர அவசரமாக பல கோடி மதிப்பில் சாலை, பூங்கா, மழைநீர் கால்வாய் பணிகள் என பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இதில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று பல லட்சம் ரூபாயை நகராட்சி பொறியாளர் பிரிவு அதிகாரிகள் அபேஸ் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், தாம்பரம் நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன்  புதுக்கோட்டை நகராட்சிக்கு மாற்றப்பட்டார். ஆனால், அவர் பணியில் இருந்தபோது, நகராட்சியில் நடைபெற்ற பணிகளின் கோப்புகளில் இதுவரை கையெழுத்திடவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி ஒப்பந்ததாரர்கள் அவரை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘நடைபெற்ற பணிகளுக்கான கோப்புகளில் கையெழுத்திட வேண்டும் என்றால் ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு தொகையை ஒப்பந்ததாரர்கள்  கொடுக்க வேண்டும். இல்லை என்றால் கையெழுத்து போடாமல் சென்று விடுவேன்’’ என தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தாம்பரம் நகராட்சி ஒப்பந்ததாரர்கள் கூறுகையில், ‘‘தாம்பரம் நகராட்சி பகுதிகளில் சாலை, பூங்கா, மழைநீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பலகோடி ரூபாயில் நடைபெற்றன. இதில் பெரும்பாலான பணிகள்  நிறைவடைந்ததும், சில பணிகள் தொடர்ந்து நடைபெற்றும் வருகின்றது. இதில் பல லட்சம் ரூபாயை நகராட்சி அதிகாரிகள் கொள்ளையடித்தனர். இதுகுறித்த புகாரையடுத்து தாம்பரம் நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் அதிரடியாக புதுக்கோட்டை பகுதிக்கு மாற்றப்பட்டார். ஆனால், அவர் இதுவரை தாம்பரம் நகராட்சியில் இருந்து செல்லாமல் இருப்பதோடு, நகராட்சியில்  நடைபெற்று முடிவடைந்த பணிகளுக்கான கோப்புகளில் இதுவரை கையெழுத்திடாமல் இருந்து வருகிறார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டால், எந்தெந்த பணிகள் நடைபெற்று முடிவடைந்து கோப்புகளில் கையெழுத்திட வேண்டுமோ அந்த பணிகளுக்கு குறிப்பிட்ட தொகை கொடுத்தால்தான் கையெழுத்திடுவேன், என்கிறார்.ஆனால் நாங்கள் பணிகளை முன்பு எடுத்து செய்யும்போதே அவருக்கு 30 சதவீதம் கமிஷன் தொகை கொடுத்துவிட்டோம்.  அவர் கையெழுத்திட்டால்தான் நாங்கள் செய்த பணிகளுக்கான பில் பாஸ் ஆகும். ஆனால், தற்போது இவர் இப்படி தெரிவிப்பதால் எங்களுக்கு என்னசெய்வது என்று புரியவில்லை. பணிமாற்றம் செய்யப்பட்டதாக அறிவிப்பு  வந்ததில் இருந்து அவர் நகராட்சி அலுவலகத்திற்கு வருவதில்லை. ஒருவேளை அவர் கோப்புகளில் கையெழுத்திடாமல் புதுக்கோட்டை பகுதிக்கு சென்றுவிட்டால் நாங்கள் அனைவரும் புதுக்கோட்டைக்கு சென்று தான் கோப்புகளில் கையெழுத்து வாங்கமுடியும். செய்து முடித்த பணிகளுக்கு அவர்  கையெழுத்து போடாமல் இருப்பதால் நாங்கள் புதுக்கோட்டைவரை சென்று அலைய முடியாது. எனவே அவர் இங்கிருந்து புதுக்கோட்டைக்கு செல்லுவதற்கு முன்பே பணிகளுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டு செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்,’’ என்றனர்.

Related Stories: