மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் கழிவுநீர் குட்டையாக மாறிய குளம்: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை

திருவொற்றியூர்: மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் கழிவுநீர் குட்டையாக மாறி துர்நாற்றம் வீசும் குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். மாதவரம் மண்டலம், 33வது வார்டுக்கு உட்பட்ட பொன்னியம்மன் மேடு, பிரகாஷ் நகர் பிரதான சாலையில் குலுப்பை  குளம் உள்ளது. சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் சுற்றுப் பகுதியில் உள்ள  குடியிருப்புகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. ஆனால், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இந்த குளத்தை முறையாக பராமரிக்காததால் புதர்மண்டி தூர்ந்துள்ளது. மேலும், சுற்று வட்டாரத்தில் உள்ள பல குடியிருப்புகளில் இருந்து வெளிேயறும் கழிவுநீர் இந்த குளத்தில் விடப்படுவதால், கழிவுநீர் குட்டையாக மாறி துர்நாற்றம் வீசுகிறது.

இதில் கொசுக்கள் உற்பத்தியாவதால் இங்குள்ள மக்களுக்கு தொற்று நோய் பரவுகிறது. மேலும் இங்குள்ள சிலர் குளத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளனர். இதனால் இதன் பரப்பளவு குறைந்துள்ளது. குளக்கரையில் சென்னை மாநகராட்சியின் காரியம் மேடை உள்ளது. இங்கு இறந்தவர்களுக்காக சடங்கு செய்ய வரும் பொதுமக்கள் இந்த குளத்து நீர் துர்நாற்றம் வீசுவதால் இதைப் பயன்படுத்துவதில்லை. எனவே, இந்த குளத்தை  தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் சென்னை மாநகராட்சிக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தற்போது, இப்பகுதியை சேர்ந்த பலருக்கு மலேரியா, மர்ம காய்ச்சல் போன்ற நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சேறும் சகதியுமாக உள்ள இந்த குளத்தை  சீரமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும், என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: