×

கும்மிடிப்பூண்டி அருகே தோக்கமூரில் கிடப்பில் மழைநீர் கால்வாய் பணிகள்: அவதியில் பொதுமக்கள்

கும்மிடிப்பூண்டி, பிப். 19: தோக்கமூர் இருளர் காலனியில் 3 வருடமாக கிடப்பில் போடப்பட்டுள்ள மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை  வைத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி அடுத்த தோக்கமூர் ஊராட்சிக்குட்பட்ட பெருமாள் கோயில் தெரு, ஊராட்சி மன்ற அலுவலகம் தெரு, தோக்கமூர் காலனி, எல்லார் மேடு, எடகண்டிகை, மதுரை வீரன் கோவில் தெரு,  பர்மா காலனி உள்ளிட்ட  பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.   இதில் ஒரு பகுதியில் இருளர் காலனி உள்ளது. இந்த காலனியில் 50 குடும்பங்களை சேர்ந்தவர்கள் சுமார் 30 வருடங்களாக வசித்து வருகின்றனர்.

 இருளர் காலனி பகுதியை ஒட்டி மழைநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை ஒட்டியே 30 அடி அகல தார்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் கால்வாயில் தண்ணீரை கரைபுரண்டு ஓடும். அப்போது வீடுகளில்  இருந்து சாலைக்கு வர கால்வாயில் இறங்கி செல்ல வேண்டி இருந்தது. இதை தவிர்க்கும் வகையில் கால்வாயின் இருபுறமும் கரை அமைத்து சிமென்ட் சிலாம் போட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி 3  ஆண்டுகளுக்கு முன்பு கால்வாய் அகலப்படுத்தி இருபுறமும் கரை அமைத்து சிமென்ட் சிலாப் போடும் பணி தொடங்கியது. அந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 20 லட்ச ரூபாய் நிதியில் தொடங்கப்பட்ட பணி சுமார் 40% வரை முடிந்தது. மீதி 60 சதவீத பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கால்வாய் கரை அமைப்பதற்காக  தோண்டப்பட்ட பள்ளத்தை கடக்க மரப்பலகை  பயன்படுத்தப்படுகிறது.

சில இடங்களில் பள்ளத்தின் குறுக்கே சிமென்ட் சிலாப் போடப்பட்டுள்ளது.  கிடப்பில் உள்ள கால்வாய் பணியை முடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும், கிராம சபை கூட்டங்களில்  தீர்மானம் நிறைவேற்றியும் பயன் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், கிடப்பில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Thokamur ,Gummidipoondi ,
× RELATED கும்மிடிப்பூண்டி சிப்காட்டில்...