இளம்பெண் கழுத்தறுத்து கொலை

சென்னை, பிப். 19:  சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் பூக்கள் இங்குள்ள கடைகளில் மொத்த விற்பனை செய்யப்படுகிறது.  இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த பூ வியாபாரிகள் தினசரி இங்கு வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர். இங்கு, பூமாலை கடைகளும் உள்ளதால், அதிகாலை முதல் இரவு வரை எப்போதும் இந்த பகுதி  பரபரப்பாகவே காணப்படும்.
இந்நிலையில், பூ மார்க்கெட் அருகே உள்ள ஒரு கையேந்தி பவனில் நேற்று முன்தினம் இரவு 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணும், ஒரு வாலிபரும் பிரியாணி வாங்கிக் கொண்டு, மார்க்கெட் பகுதியில் அமர்ந்து  சாப்பிட்டுள்ளனர்.
அப்போது, பிரியாணியில் கறி இல்லை என்று அந்த இளம்பெண் வாலிபரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி, மறைத்து  வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த இளம்பெண்ணின் கழுத்தை அறுத்துள்ளார். இதில், அந்த பெண் அலறி துடித்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு மார்க்கெட்டில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள்  ஓடி வந்தனர். இதை பார்த்ததும் அந்த வாலிபர் ஓட்டம் பிடித்தார்.
இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் உதவி கமிஷனர் ஜான் சுந்தர், கொலை சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார். கொலையான இளம்பெண் யார், கொலை செய்த வாலிபர் யார், இருவரும் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரம்  தெரியவில்லை.

× RELATED இளம்பெண் தற்கொலை