வீட்டை உடைத்து 50 சவரன் கொள்ளை: அன்பளிப்பு நகைகளை வழக்கில் சேர்க்க போலீசார் மறுப்பு

கூடுவாஞ்சேரி, பிப்.19: கூடுவாஞ்சேரி அருகே ஆதனூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், 50 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ரசீது உள்ள  நகைகளை வழக்கில் எடுத்துக்கொள்கிறோம். திருமணத்திற்கு அன்பளிப்பாக வந்த 25 சவரனை சேர்க்க மட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.கூடுவாஞ்சேரி அருகே ஊரப்பாக்கம் அடுத்த ஆதனூர் எம்ஜி நகரில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் கணேஷ்பாபு (35). மறைமலைநகர் மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் உதவி  மேலாளராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி பிரியா (33). இவர்களுக்கு 6 வயதில் ெபண் குழந்தை உள்ளது.கடந்த 15ம் தேதி இரவு மகளுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் கணேஷ்பாபு, பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மகளை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பிரியா, மகளை பார்த்து கொண்டார்.2  நாட்களாக கணேஷ்பாபு வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கணேஷ்பாபு, வீட்டுக்கு சென்றார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோவை உடைத்து,  லாக்கரில் இருந்த 50 சவரன் நகை, வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.தகவலறிந்து வண்டலூர் டிஎஸ்பி வளவன், கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.  அங்கு வீட்டின் கதவு மற்றும் பீரோவில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைகள்  பதிவு செய்து சென்றனர். மேலும் போலீசார், வழக்குப்பதிவு செய்து, நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனப்ா.இதற்கிடையில், கணேஷ்பாபு கொடுத்த புகாரை பெற்ற போலீசார், நகை வாங்கியதற்கான ரசீது இருந்தால் மட்டும் கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்யப்படும்.

அன்பளிப்பாக வந்த நகை குறித்து பதிவு செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணேஷ்பாபு கூறுகையில், ‘எங்களது திருமணத்தில் அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட நகைகள் மற்றும்  நாங்கள் வாங்கிய நகைகளையும் சேர்த்து 50 சவரன் கொள்ளை போனது. இதுதொடர்பாக கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தோம்.ஆனால் போலீசார், அன்பளிப்பாக வந்த நகைகளை கணக்கில் கொள்ள மாட்டோம். உங்களிடம் ரசீது இருக்கும் 25 சரவனுக்கு மட்டும் வழக்குப்பதிவு செய்வோம் என கூறுகின்றனர். அன்பளிப்பாக வந்த நகைகளுக்கு நாங்கள் எப்படி  ரசீது வாங்க முடியும். அவ்வாறு உறவினர்களிடம் கேட்டால், எங்களது குடும்ப உறவு பாதிக்கப்படாதா என்றார்.இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, இது போன்ற சம்பவங்களில் வங்கி மற்றும் அடகு கடைகளில் வைத்த நகைகளையும் சேர்த்து புகார் தெரிவிக்கின்றனர். தீவிர விசாரணைக்கு பிறகு சில சவரன் நகைகள் அடகு  வைத்திருப்பது தெரிகிறது. அதனால் வழக்கின்போது, அன்பளிப்பாக வந்த நகைகள் கணக்கில் வைப்பது கிடையாது. ஆனால், அதற்கான ஆதாரமாக திருமணம் உள்ளிட்ட சப நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்  காண்பித்தால், அவற்றை வழக்கில் சேர்த்து கொள்வோம்’ என்றனர்.

× RELATED மும்பை வியாபாரியிடம் 23 சவரன் கொள்ளை