×

பல்வேறு அமைப்புகள் சார்பில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

காஞ்சிபுரம், பிப்.19: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையொட்டி, காஞ்சிபுரத்தில் பல்வேறு  அமைப்புகள் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில் காஞ்சிபுரம் வடிவேல் நகரில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி கூட்டு தியானம் செய்தனர்.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு சங்க மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அங்கம்பாக்கம் அரசுப் பள்ளியில் உயிரிழந்த ராணுவ  வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பள்ளித் தலைமை ஆசிரியர் தணிகை அரசு தலைமையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில்,  ஆசிரியர் சேகர் உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். நாட்டின் எல்லைப்பகுதியில் இரவு பகல் பாராமல் உறக்கமின்றி குடும்பத்தினரை விட்டுபிரிந்து நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களின் வீரதீர தியாக வாழ்க்கையை பற்றி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துக்  கூறினர்.மாவட்ட தலைநகர் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பத்திரிகையாளர் அரங்கில் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. சங்கத் தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். செய்தியாளர்கள் ஜாபர்,  பாஸ்கர், சேஷாத்திரி, ஸ்ரீராம், சூர்யா, ஆர்.சந்திரசேகரன், எம்.சந்திரசேகரன், ராமநாதன், ராமலிங்கம், வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.மேலும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு வந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்பட ஏராளமானோர் இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags : organizations ,soldiers ,heroes ,
× RELATED தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து