பொய் வழக்குப்பதிவு செய்வதாக கூறி போலீசாரை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல்: செங்கல்பட்டில் பரபரப்பு

செங்கல்பட்டு, பிப்.19: வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்வதாக கூறி, போலீசாரை கண்டித்து செங்கல்பட்டு நீதிமன்ற வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் குமரேசன், லோகநாதன், சசிகலா, ராஜேந்திரன் ஆகியோர் மீது பொய் வழக்குப்பதிவு செய்த போலீசாரை கண்டித்து, செங்கல்பட்டு நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று ஒருநாள்  முழுவதும் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும் செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில் திடீர் மறியல் போராட்டமும் நடத்தினர்.
வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் சையத் உஸ்மான் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்த போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர்.
தகவலறிந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில்  அரைமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், செங்கல்பட்டு நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீது எவ்வித விசாரணையும் இல்லாமல் கிரிமினல் வழக்கை போலீசார் பதிவு செய்கின்றனர். இதனை வன்மையாக  கண்டிக்கிறோம்.  வழக்கறிஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறவேண்டும். இல்லாவிட்டால், பல்ேவறு போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.
வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, நீதிமன்ற பணிகளும் பாதிக்கப்பட்டன.

× RELATED சக காவலரை தாக்கிய வழக்கில் போலீஸ்காரருக்கு 2 ஆண்டு சிறை