சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.55 லட்சத்தில் நுண்கருவி பிரிவு: மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

ஆலந்தூர்: சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் கணினி மயமாக்கப்பட்ட நுண்கருவி பிரிவு மற்றும் புதிய கட்டிடம், சைதை தொகுதி எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.55 லட்சம்  மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு சிறுவனுக்கு, மருத்துவர் முன்னிலையில் நுண்கருவி மூலம்  பரிசோதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ பேசியதாவது:தினசரி ஆயிரக்கணக்காக  மக்கள் மருத்துவ பயன்களை பெறுகின்ற மிகப்பெரிய மருத்துவமனையாக இந்த  மருத்துவமனை உள்ளது. இங்கு கணினி  மயமாக்கப்பட்ட நுண்கதிர் கூடம் மற்றும் புதிய கட்டிடம் மக்களின்  பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.  

மருத்துவமனைகளை சீரமைப்பதிலோ, கண்காணிப்பதிலோ, மருத்துவ பொருட்களை  வாங்குவதிலோ சுகாதாரத்துறை அக்கறையுடன் கவனம் செலுத்துவதில்லை. சைதாப்பேட்டை மருத்துமனை  கட்டிடத்தை இடித்து விட்டு  அடுக்கு மாடிகட்டிடம் கட்ட பொதுப்பணித்துறை மூலம் ரூ.23 கோடியில் முதற்கட்ட பணி முடிந்து 3 ஆண்டுகளாக அப்படியே உள்ளது.   இதுகுறித்து  சட்டமன்றத்தில் பேசியும் சுகாதார துறை செயலாளரை சந்தித்தும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு அவர் பேசினார். விழாவில், அரவிந்த்ரமேஷ் எம்எல்ஏ, அவைத்தலைவர் குணசேகரன், பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் தர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், பாட்சா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

× RELATED இந்துத்துவா, ஊழல் எதிர்ப்புதான் பாஜக...