டிடிவி தினகரன் அணியினரால் பூட்டப்பட்ட பெரம்பூர் கூட்டுறவு சங்க கட்டிடம்: நீதிமன்ற உத்தரவின் பேரில் திறப்பு...போலீஸ் குவிப்பால் பரபரப்பு

பெரம்பூர்: பெரம்பூரில் டிடிவி தினகரன் அணியினரால் பூட்டப்பட்ட கூட்டுறவு சங்க கட்டிடத்தை நீதிமன்ற உத்தரவின்பேரில் அதிமுகவினர் திறந்தனர். பெரம்பூர் நெடுஞ்சாலையில் பாரதி கூட்டுறவு சங்க கட்டிடம் உள்ளது. இந்த சங்கத்துக்கான    தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில், அதிமுகவை சேர்ந்த திருவிக நகர் இளைஞரணி பகுதி செயலாளர் முகுந்தன்  போட்டியிட்டு தலைவராக வெற்றி பெற்றார்.இந்நிலையில், ஏற்கனவே அந்த பதவியில் இருந்த டிடிவி தினகரன் அணியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர், கூட்டுறவு சங்க கட்டிடத்தை, புதிய தலைவரான முகுந்தனிடம் ஒப்படைக்காமல், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து,  கட்டிடத்துக்கு பூட்டு போட்டார். அதுமட்டுமின்றி, முறைகேடாக பன்மாநில கூட்டுறவு சங்கமாகவும் இச்சங்கத்தை மாற்றினார். இதை ஏற்காத அதிமுகவினர், பூட்டை உடைத்து கூட்டுறவு சங்க அலுவலகத்தை திறக்க முயன்றனர். இதற்கு டிடிவி தினகரன்  அணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்புக்கும் மோதல் சூழல் ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், நீதிமன்றத்தை நாடி, அதன்பின்னர் கூட்டுறவு சங்க கட்டிடத்தை திறந்து கொள்ளுங்கள், என இரு தரப்பினரிடமும் தெரிவித்தனர். இதையடுத்து, இரு தரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தனர்.  வழக்கை விசாரித்த  நீதிபதிகள், டெல்லியில் உள்ள மத்திய பதிவாளர் அலுவலகம் இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டனர்.  அதன்படி, கடந்த 12ம் தேதி இந்த சங்கம் கூட்டுறவு சங்கமாகத்தான் செயல்பட வேண்டும், என உத்தரவு பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, புதிய தலைவர் முகுந்தன் நேற்று காவல் துறையினர்  முன்னிலையில், சங்க அலுவலகத்துக்கு போடப்பட்டிருந்த பூட்டை உடைத்தார். பின்னர், சென்னை கூட்டுறவு சார் பதிவாளர் பழனிவேல் முன்னிலையில் தலைவராக பதிவியேற்று தனது அலுவலக பணியை தொடங்கினார். மீண்டும் டிடிவி அணியை சேர்ந்தவர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது. மேலும் கூட்டுறவு சங்கத்தின்  பழைய தலைவர், சங்கத்தின் ஆவணங்கள், சாவியை தராதது குறித்து முகுந்தன் செம்பியம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

× RELATED பிக்கனஅள்ளியில் கட்டி முடித்தும்...