ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகரில் 2 மாதங்களாக துப்புரவு பணிகள் நிறுத்தம்: „ தெருக்களில் குப்பை குவியல் „ சுகாதார சீர்கேட்டில் மக்கள்

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகர் பகுதியில் கடந்த 2 மாதமாக துப்புரவு பணிகள் நடைபெறாததால், தெருக்கள் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேட்டில் தவித்து  வருகின்றனர்.மேற்கு வேளச்சேரி, 177வது வார்டுக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகர் 2வது விரிவாக்க தெருவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மாநகராட்சி ஒப்பந்த  துப்புரவு பணியாளர்கள் கடந்த 2  மாதங்களாக இப்பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபடாததால், தெருவெங்கும் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது.குறிப்பாக, இங்குள்ள  கிறிஸ்தவ தேவாலயம் அருகில் குப்பை கழிவுகள் மலைேபால் குவிந்துள்ளது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால்,  இந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் மூக்கை பிடித்து வெளியில் செல்லும் நிலை உள்ளது.

சாலையில் உள்ள குப்பை குவியலை காக்கை, நாய்கள் எடுத்து சென்று சாலையின் நடுவே போட்டு கிளறுவதால், சாலை முழுவதும் ஒரே குப்பையாக காணப்படுகிறது. இங்குள்ள குப்பையை அகற்றுமாறு இப்பகுதி மக்கள்  மாநகராட்சி  அதிகாரிகளை பலமுறை  வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும்  எடுக்கவில்லை. இந்த குப்பை குவியலால் இந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த வார்டில் கடந்த 2 மாதமாக துப்புரவு பணிகள் நடைபெறவில்லை. இதனால், தெருக்கள் முழுவதும் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. இதுபற்றி மாநகராட்சியில் பலமுறை  முறையிட்டும் நடவடிக்கை இல்லை.  “சுவட்ச் பாரத்” எண்ணுக்கு போன் செய்து குப்பைகளை அகற்றுமாறு புகார் செய்தால், அந்த  புகார்தாரரின்  செல்போன் எண் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.  2 மாதமாக குப்பை தேங்குவதால் கொசு உற்பத்தி அதிகரித்து நோய் பாதிப்பில் தவித்து வருகிறோம். எனவே, இந்த பகுதி மக்கள் நலன் கருதி, குப்பைகளை சம்மந்தப்பட்ட  துப்புரவு பணியாளர்கள்  உடனடியாக அகற்ற   மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்,’’ என்றனர்.

× RELATED தாம்பரம் நகராட்சியில் துப்புரவு பணி...