×

மரபு சின்னங்களை பாதுகாப்பது எவ்வாறு? கங்கைகொண்டசோழபுரத்தில் வெளிநாட்டு குழுவினர் ஆராய்ச்சி

ஜெயங்கொண்டம்,பிப்.15: பாரம்பரிய சின்னங்கள் மரபு சின்னங்கள் அனைத்து வகை பண்பாட்டு பொருட்கள் ஆகியவற்றை பாதுகாப்பது எவ்வாறு என்ற ஆராய்ச்சி கருத்தரங்கம் மற்றும் ஆய்வு நிகழ்ச்சி ஜப்பானிய குழுவினருடன் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கைகொண்டசோழபுரத்தில் நடைபெற்றது.
ஜப்பான் நாட்டின் கோபே எமாட்டோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆய்வாளர்கள் கங்கைகொண்டசோழபுரத்திற்கு வந்திருந்தனர். இவர்களுடன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக கடல்சார் வரலாறு, கடல்சார் தொல்லியல்துறை பேராசிரியர்கள் கலந்துகொண்டு கடந்த இரண்டு நாட்களாக தஞ்சையில் கருத்தரங்கம் நடத்தி பின்னர் நேற்று கங்கைகொண்டசோழபுரத்திற்கு வருகை தந்தனர். இவர்களை கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டுக்குழும தலைவர் பொறியாளர் கோமகன் வரவேற்றார்.
ஜப்பானிய பல்கலைக்கழக பேராசிரியர் மனபு கொய்சோ குழுவினர், இந்திய பூனே தக்காண பல்கலைக்கழக தொல்லியல்துறை இணை இயக்குனர் ஓட்டா, பேராசிரியர் பத்தலை, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக கடல்சார் வரலாறு, கடல்சார் தொல்லியல் துறை பேராசிரியர்கள் ராஜவேலு, செல்வராசு, கங்கைகொண்டசோழபுரம் பாரதி ஆகியோர் கோவில் சிற்பங்கள் மற்றும் அகழ்வைப்பகத்தில் உள்ள சிலைகள் புராதன பொருட்கள் மற்றும் ராஜேந்திரசோழன் வசித்த மாளிகைமேடு கட்டிட அடித்தளங்களையும் பார்வையிட்டு குறிப்பு எடுத்தனர். இவற்றில் பல்கலைக்கழகத்தினர் எப்படி மரபு பண்பாட்டு சிலைகளை பாதுகாக்கின்றனர்.
சிறு கிராமங்கள் மற்றும் நகரங்களை எப்படி மேம்படுத்துவது, பொருளாதார வளர்ச்சியில் எப்படி மேம்படுத்துவது, இதனால் ஏற்படும் எதிர்விளைவுகளை சமாளிப்பது, மரபு சிலைகளுக்கு எந்தவித சேதமும் இன்றி எவ்வாறு பாதுகாப்பது, ஜப்பானில் எவ்வாறு பாதுகாக்கின்றனர் என்று இந்திய பேராசிரியர்களும், இந்தியாவின் பாதுகாப்பு முறைகளை பற்றியும் அவர்களும் ஒருவருக்கொருவர் தெரிந்துகொண்டனர். இக்குழுவினர் எடுத்த குறிப்புகளை அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளனர். இக்குழுவினர்களுடன் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்களும் வந்திருந்து குறிப்புகள் எடுத்தனர்.

Tags : crew ,Gangaikondanolapuram ,
× RELATED ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் சிபிஐ ரெய்டு