×

அறந்தாங்கியில் நெல் அறுவடை தீவிரம் எள், உளுந்து சாகுபடிக்கு மானிய விலையில் விதைகள் விவசாயிகள் எதிர்பார்ப்பு

அறந்தாங்கி, பிப். 15:  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வருவாய் கோட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது. இதில் 25,000 ஏக்கர் காவிரி நீர் மூலமும், 35 ஆயிரம் ஏக்கர் மழைநீர் மூலமும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் போதிய மழை பெய்யாததால் விவசாயம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்தாண்டு காவிரியில் வந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். இந்தாண்டு 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கதிர்களாகி உள்ளன. ஆனால் மழையை மட்டுமே நம்பி சாகுபடி செய்யப்பட்டிருந்த பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகின. மேலும் பல்வேறு பகுதிகளில் குலைநோய் தாக்குதலாலும் விவசாயம் பாதிக்கப்பட்டது.இந்நிலையில் இப்பகுதியில் கதிர் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயிகள் கதிர் அறுவடை முடிந்த பின் தொடர் சாகுபடியாக எள், உளுந்து சாகுபடி செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக நிலவிய வறட்சியின் காரணமாக விவசாயிகள் ஒருபோக சாகுபடியையே செய்ய முடியாத நிலையில் தொடர் சாகுபடி என்பது கானல் நீர் போல இருந்தது.

இந்நிலையில் தற்போது காவிரி பாசன பகுதி உள்ளிட்ட சில பகுதிகளில் நெல் அறுவடை முடிந்த பின்பு வயல்களில் ஈரப்பதம் உள்ளதால் விவசாயிகள் புழுதி உழவு உழுது, எள் அல்லது உளுந்து சாகுபடி செய்ய எண்ணியுள்ளனர். விவசாயிகள் தொடர் சாகுபடியாக எள், உளுந்து போன்றவற்றை சாகுபடி செய்வதற்கு மானிய விலையில் விதைகள், நுண்ணூட்டச்சத்து மற்றும் ஆலோசனையை வேளாண்மைத்துறையினர் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
இதுகுறித்து காவிரிப்பாசன பகுதி விவசாயிகள் கூறியதாவது: தற்போது கதிர் அறுவடை நடந்து வருகிறது. அறுவடையாகும் வயல்களில் ஓரளவு ஈரப்பதம் இருப்பதால் புழுதி உழுது, எள், உளுந்து போன்ற பணப்பயிர்களை விதைப்பு செய்ய வாய்ப்புள்ளது. விதைத்தால் இடைப்பட்ட காலத்தில் ஒரு மழை பெய்தால் கூட பயிரை காப்பாற்றி விடலாம். கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் பெற்ற கடனை இந்தாண்டு நெல் அறுவடை செய்து தான் அடைத்தோம். அப்படி இருக்கும் நிலையில் எள் அல்லது உளுந்து சாகுபடி மூலம் வருமானம் கிடைத்தால் அது எங்கள் குடும்பத்தின் தேவைக்கு பயன்படும். எள், உளுந்து போன்ற பயிர்களை சாகுபடி செய்ய விதைகள், நுண்ணூட்ட சத்துக்களை மானிய விலையில் வழங்குவதோடு வேளாண்மை துறையினர் உரிய ஆலோசனை வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...