×

தமிழக தொல்லியல்துறை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் புகைப்பட கண்காட்சி 17ம் தேதி வரை நீட்டிப்பு 17ம் தேதி வரை நீட்டிப்பு v

தஞ்சை, பிப். 15: தமிழக அரசின் தொல்லியல்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் இந்திய- ஜப்பான் நாடுகளின் தேசிய கருத்தரங்கம் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 3 நாட்கள் நடந்தது. இதையடுத்து தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரண்மனை தர்பார் மகாலில் தமிழக அரசின் தொல்லியல் துறையினரால் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது. கடந்த 11ம் தேதி துவங்கிய கண்காட்சியை தினமும் ஏராளமானோர் கண்டுரசித்து வருகின்றனர். கண்காட்சி நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில் பார்வையாளர்களின் வேண்டுகோளை ஏற்று வரும் 17ம் தேதி கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது.இதில் சிவகங்கை அருகே கீழடியில் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கும் கி.பி. 2ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ் பிராமதி எழுத்துகள், தமிழ் எழுத்துகள், கண்ணாடி பொருட்கள், கருப்பு சிவப்பு பானை, சுடுமண் உருவங்கள், விளையாட்டு பொருட்கள், எலும்புகளாலான ஈட்டி உள்ளிட்ட வேட்டைக்கான பொருட்களின் புகைப்படங்கள் உள்ளன.

அதேபோல் ரோம் நாட்டுடன் இருந்த வணிக உறவுகள், சங்கு குவியல்கள், தானிய சேமிப்பு கலன்கள், உறைகிணறுகளின் புகைப்படங்கள் காட்சிக்கு உள்ளன. இவை ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாகும். திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூரில் கண்டெடுக்கப்பட்ட மண் பானைகள், வடிகட்டிகள், அணிகலன்கள், தங்கம் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட தோடுகளின் புகைப்படங்கள் உள்ளது. பொதுமக்களுக்கு புகைப்படம் தொடர்பான விளக்கங்களை தஞ்சை மணிமண்டபம் காப்பாட்சியர் தும்மராஜு விளக்கினார். இதுகுறித்து தமிழக தொல்லியல் அலுவலர் தங்கதுரை கூறும்போது, கீழடியில் அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மதுரை அலுவலகத்திலும், அழகன்குளம், பட்டறை பெரும்புதூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் சென்னை அலுவலகத்திலும் வைக்கப்பட்டுள்ளது. இப்பொருட்களை புகைப்படமாக எடுத்து தமிழக தொல்லியல்துறை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி வருகிறது. தஞ்சையில் 4 நாட்களாக கண்காட்சிக்கு திட்டமிட்டோம். ஆனால் பார்வையாளர்கள் எதிர்ப்பார்த்ததைவிட அதிகம் வருவதால் மேலும் 3 நாட்களுக்கு அதாவது வரும் 17ம் தேதி வரை நீட்டித்துள்ளோம். தினமும் இக்கண்காட்சி காலை 11 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது என்றார்.

Tags : Photo Exhibition ,Tamilnadu ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி: கலெக்டர் ஆய்வு