100 ஆண்டுகளாக தரம் உயர்த்தப்படாத பேராவூரணி ரயில்வே லைன் சாலை வாகன ஓட்டிகள் அவதி

பேராவூரணி, பிப். 15: பேராவூரணியில் 100 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள ரயில்வே லைன் சாலை தரம் உயர்த்தப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு ரயில்வே லைன் கிழக்கு தெரு, நகரின் மைய பகுதியில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளது. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 8, 9வது வார்டு பொதுமக்கள், பழைய பேருந்து நிலையம் அருகே துவங்கி ரயில்வே உரக்கிடங்கில் முடிவடையும் 550 மீட்டர் நீளமுள்ள பாதையை நூற்றாண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
Advertising
Advertising

தினம்தோறும் இந்த சாலையில் பள்ளி, கல்லூரி பேருந்துகள், ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. பேராவூரணி நகரில் நெருக்கடியை தீர்க்கும் வகையில் சேது சாலையில் இருந்து புதிய பேருந்து நிலையம் மற்றும் அறந்தாங்கி செல்லும் முக்கிய இணைப்பு சாலையாகவும் இது உள்ளது.

ரயில்வே நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இச்சாலை பல ஆண்டுகளாகவே மண் சாலையாக உள்ளது. குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலை மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று பயணம் செய்ய முடியாத நிலையிலும், வெயில் காலங்களில் செம்மண் தூசிகள் பறந்து அப்பகுதியில் பொதுமக்கள் குடியிருக்க முடியாத நிலையில் உள்ளது.

இந்த சாலையை தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பேராவூரணி பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் டாக்டர் சீனிவாசன் கூறியதாவது: இதுகுறித்து பலமுறை பேரூராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டோம். தஞ்சை கலெக்டரும் இந்த இடத்தை பார்வையிட்டு சாலை அமைக்கலாம் என்று உத்தரவிட்டார். ஆனாலும் ரயில்வே இடம் என சாலை அமைக்க பேரூராட்சி அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடமும் பலமுறை முறையிட்டும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. காரைக்குடி- திருவாரூர் அகல ரயில்பாதை அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இப்பகுதியில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர், உதவி ஸ்டேஷன் மாஸ்டர், பாயிண்ட் மேன் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு அமையும் நிலையில் தார்ச்சாலை அமைந்தால் அனைவருக்கும் உதவியாக இருக்கும். தேவைக்கும் அதிகமாக இடவசதி இருப்பதால் தார்ச்சாலை அமைப்பதில் நெருக்கடி இருக்காது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி தார்ச்சாலை அமைக்க அனுமதியளிக்க வேண்டும். ரயில்வே அதிகாரிகள் சம்மதித்தால் உடனடியாக தார்ச்சாலையாக அமைத்து தர பேரூராட்சி அதிகாரிகள் தயாராக உள்ளனர் என்றார். கலெக்டர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: