6 ஆண்டுகளுக்கு பின் கும்பகோணம் பொற்றாமரை குளத்தில் 19ம் ேததி மாசிமக தெப்ப உற்சவம் ஏற்பாடுகள் மும்முரம்

கும்பகோணம், பிப். 15: கும்பகோணம் பொற்றாமரை குளத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப உற்சவம் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதற்காக தெப்பம் கட்டும் பணி மும்முரமாக நடக்கிறது.மாசிமக விழாவையொட்டி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள 12 சிவன் கோயில்கள் மற்றும் 3 பெருமாள் கோயில்களில் கொடியேற்றம், தேரோட்டம், தீர்த்தவாரிகள் நடைபெறும். இதேபோல் சாரங்கபாணி சுவாமி கோயிலில் மாசி மகத்தையொட்டி 7 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறும். அப்போது 6 நாட்கள் கோயிலுக்குள்ளே சுவாமி உள் புறப்பாடு நடைபெறும். இறுதி நாளான மாசி மகத்தன்று கோயிலின் பின்புறம் உள்ள பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். அப்போது ஸ்ரீதேவி, பூதேவியுடன் சாரங்கபாணி, தெப்ப உற்சவத்தில் காட்சியளிப்பார்.இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக பொற்றாமரை குளத்தில் தண்ணீர் இல்லாததால் நிலை தெப்பமாக விழா நடந்தது. இந்தாண்டு தெப்ப உற்சவம் நடத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையொட்டி கோயில் நிர்வாகத்தினர், காவிரி ஆற்றில் ராட்ஷத மோட்டார் அமைத்து குளத்துக்கு தண்ணீர் திறந்து விட்டனர். தற்போது குளத்தில் 9 அடி வரை தண்ணீர் உள்ளது. இதனால் தெப்பம் உற்சவம் நடத்தலாம் என்று முடிவெடுத்து சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திலிருந்து புதிதாக 400 பேரல்கள் வாடகைக்கு வாங்கி வந்து தெப்பம் கட்டும் பணி மும்முரமாக நடக்கிறது. இதனால் மாசி மகத்தையொட்டி கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் வரும் 19ம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறும் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தெப்பம் கட்டும் கொத்தனார் கூறுகையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தெப்ப உற்சவம் நடத்தப்பட்டது. அதன்பிறகு குளத்தில் தண்ணீர் இல்லாததால் தெப்ப உற்சவம் நடைபெறாமல் நிலை தெப்பமாக விழா நடந்தது.இந்தாண்டு தெப்ப உற்சவ விழா நடத்துவதற்காக குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி பொற்றாமரை குளத்தில் தெப்பம் உற்சவம் நடைபெறும் என்றார்.

Related Stories: