சேத கணக்கெடுப்பில் மோசடி செய்ததால் 40 சதவீதம் பேருக்கு புயல் நிவாரணம் கிடைக்கவில்லை  தரமற்ற கன்றுகள் வழங்கல்  15 ஆண்டுகள் ஆனாலும் காய்க்காது  விவசாயிகள் கவலை

பட்டுக்கோட்டை, பிப். 15: கணக்கெடுப்பில் மோசடி செய்ததால் 40 சதவீத தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம்  கிடைக்கவில்லை. மேலும் தரமற்ற கன்றுகள் வழங்கியதால் 15 ஆண்டுகளானாலும் காய்க்காது என்பதால் விவபசாயிகள் கவலையில் உள்ளனர். கஜா புயல் கடந்தாண்டு நவம்பர் 16ம் தேதி அதிகாலை கரையை கடந்தது. இந்த புயல் ஒட்டுமொத்த டெல்டா மாவட்டத்தையே புரட்டி போட்டது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஊர்களில் வாழும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தஞ்சை மாவட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான தென்னை மரங்கள் முறிந்து விழுந்தது. இதுதவிர நெற்பயிர்கள், வாழை, செம்மரம், தேக்குமரங்கள் அழிந்தது. புயல் கரையை கடந்து நேற்றுடன் 90 நாட்களாகியும் பட்டுக்கோட்டை பகுதியில் தென்னை மரங்களை அப்புறப்படுத்த முடியாமல் அதே தென்னந்தோப்புகளில் பாதிக்கப்பட்ட மரங்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். குறிப்பாக பட்டுக்கோட்டை அடுத்த பொன்னவராயன்கோட்டையில் உள்ள தென்னந்தோப்புகளில் விழுந்த மரங்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதோடு சாய்ந்து கிடக்கும் மரங்களை மெஷின் மூலம் அறுத்து துண்டாக்கி அப்புறப்படுத்தி வருகின்றனர். கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகளுக்கு இதுவரை 60 சதவீதம் மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்று விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுவதுபோல் தமிழக அரசு பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு புதிதாக தென்னங்கன்றுகள் வழங்குகிறோம் என்று சொல்லி எதற்கும் உதவாத தென்னங்கன்றுகளை தங்களுக்கு வழங்கியுள்ளதாகவும் விவசாயிகள்  தெரிவித்துள்ளனர். மேலும் கணக்கெடுப்பில் மோசடி நடந்துள்ளதாகவும், குறிப்பாக அந்த பட்டியலில் ஆளுங்கட்சிகாரர்களின் பெயர்களை சேர்த்துள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது அரசு கொடுத்துள்ள தென்னங்கன்றுகள் தரமற்றது. 15 ஆண்டுகளானாலும் அது காய்க்காது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து தென்னை விவசாயி பொன்னவராயன்கோட்டை வீரசேனன் கூறுகையில், கஜா புயல் ஏற்பட்டு இன்றுடன் 91 நாட்களாகியும் தென்னை விவசாயிகள் மத்தியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஏனென்று கேட்டால் அரசாங்கம் எந்த அடிப்படையில் தென்னை விவசாயிகளுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.600, அதை அகற்றுவதற்கு ரூ.500 என மொத்தம் ரூ.1,100 அறிவித்தது என்று தெரியவில்லை. வெளிமாவட்டத்திலிருந்து இந்த மரத்தை வெட்டி எடுக்க வந்தவர்கள் அவர்கள் கொண்டு வந்த லாரி வரை மரத்தை கொண்டு வைப்பதற்கு ஒவ்வொரு விவசாயிக்கும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கு ஜேசிபி வாடகை ரூ.1,200 கொடுத்து மொத்தம் ரூ.10,000 செலவு செய்துள்ளோம். தஞ்சை மாவட்டத்தில் 34,000 ஹெக்டேரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது என்று அரசு சொல்கிறது.

 ஆனால் விவசாயிகள் நஞ்சை, புஞ்சை, மனை என எல்லா இடங்களிலும் தென்னை பயிரிட்டிருந்தனர். இந்த தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 60,000 ஹெக்டேரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட எந்த ஒரு தென்னை விவசாயியிடமும் ஒப்புதல் கையெழுத்து வாங்காமலேயே தென்னை விவசாயிகள் பெயரில் அவர்களாகவே ஒரு குத்துமதிப்பாக வங்கியில் இசிஎஸ் மூலம் பணம் செலுத்தியுள்ளனர். கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் தென்னை விவசாயிகளுக்கு 60 சதவீதம் மட்டுமே வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதி பேருக்கு போய் கேட்டால் நோ சர்ச் அக்கவுண்ட் என்று காட்டுகிறது. அதற்கு உங்களுடைய கணக்கை கண்டுபிடிக்கவில்லை, அதனால் பணம் திரும்பி வந்துவிட்டது என்று சொல்கின்றனர். குறிப்பாக இந்த கணக்கெடுப்பில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. அடங்கலே இல்லாமல் கணக்கெடுப்பு நடத்தி ஆளுங்கட்சிக்காரர்களிடம் கொண்டு சென்று கொடுத்து இந்த பட்டியலை அனுப்பியுள்ளனர்.

தற்போது பட்ஜெட்டில் கஜா புயல் நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். ஆனால் உண்மையிலேயே அவர்களிடம் நிதி இருக்கிறதா என்று தெரியவில்லை. தற்போது அரசு கொடுத்திருக்கக்கூடிய இலவச தென்னங்கன்றுகள் மிகவும் தரமற்றது. இந்த தென்னங்கன்றுகள் பட்டுக்கோட்டை அரசு நடத்தக்கூடிய தென்னை நாற்றாங்காலில் எடுத்துள்ளனர். இந்த தென்னங்கன்றுகளை வைத்தால் 6 ஆண்டுகளுக்குள் காய்க்கும் என்கின்றனர். ஆனால் 15 ஆண்டுகள் ஆனாலும் காய்க்காது. டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படுகிறது என்றார். இதுகுறித்து தென்னை விவசாயி பழஞ்சூர் ராஜகோபாலன் கூறுகையில், பிள்ளையைவிட அதிகமாக பாசம் வைத்த தென்னம்பிள்ளைகளை போட்டு எரிக்கிறோம். இதை அப்புறப்படுத்த எங்களுக்கு வழி தெரியவில்லை. இதுவரை என்ன கணக்கெடுத்தனர் என்று தெரியவில்லை. இதுவரையிலும் பாதிப்பேருக்கு கூட முழுமையாக நிவாரணம் கிடைக்கவில்லை. பாதிக்கப்படாதவர்களுக்கும் பணம் ஏறியுள்ளது. இதுபோன்று முழுமையாக சேதமடைந்ததற்கு பணம் ஏறவில்லை. ஆளுங்கட்சிகாரர்களின் குளறுபடியான நடவடிக்கைக்கு அதிகாரிகளும் துணை போகின்றனர்.

வீட்டு நிவாரணமாக இருந்தாலும் சரி, தென்னை நிவாரணமாக இருந்தாலும் சரி. கட்சிகாரர்களுக்கு மட்டுமே இந்த அரசு சாதகமாக இருக்கிறது. எனவே விடுபட்டு போனவர்களுக்கு மறு கணக்கெடுப்பு நடத்தி உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். தென்னை விவசாயி பொன்னவராயன்கோட்டை தங்கராசு கூறுகையில், தென்னை விவசாயிகள் வீடுகளுக்கு சென்று கிராம நிர்வாக அலுவலர்கள் கணக்கெடுக்கும்போது அப்போது எடுக்கப்பட்ட கணக்கை விட்டுவிட்டு அதற்கு பிறகு அந்தந்த தோப்புகளில் வந்து கணக்கெடுக்கும்போது சம்மந்தப்பட்ட தென்னை விவசாயிகளை அழைத்து சென்று கணக்கெடுக்காமல் அவர்களாகவே ஒரு கணக்கை போட்டு கொண்டுசென்றுவிட்டனர். இப்போது போய் கேட்டால் நீங்கள் கலெக்டரை பாருங்கள், எங்களுக்கு தெரியாது என்கிறார்கள். வேளாண்மைத்துறையில் சென்று கேட்டால் நீங்கள் சென்று கிராம நிர்வாக அலுவலர்களை பாருங்கள் என்கின்றனர். இதுபோல் எங்களை அழையவிடுகின்றனர். இதற்கு முறையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றார்.

× RELATED அனைத்து தரப்பு மக்களுக்கும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவேன்