அய்யன் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா

கோபி, பிப்.15:கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி தம்பிக்கலை அய்யன் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி யாகம் நடந்தது.  கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி தங்கமேடு தம்பிக்கலை அய்யன் கோயில் ராகு, கேது ஸ்தலமாக விளங்கி வருகிறது. ராகு கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், கேது மகர ராசியில் இருநது தனுசு ராசிக்கும் இடம் பெயர்ந்ததால் இந்த கோயிலில் சிறப்பு யாக பூஜை நடந்தது.
நேற்று முன்தினம் மதியம் யாக பூஜையும், பரிகார யாகமும் நடந்தது. இதில், பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த நெய், தயிர், பால், இளநீர், வஸ்திரம், மந்தாரை, செவ்வரளி, தேன் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு யாகம் நடந்தது.
இதைத்தொடர்ந்து, ராகு மற்றும் கேது கிரகத்திற்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், திருநீறு உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து 12 ராசி மற்றும் 27 நட்சத்திரங்களுக்கும் சிறப்பு பரிகார பூஜை நடைபெற்றது.
இதில், கவுந்தப்பாடி, கோபி, காஞ்சிக்கோயில், ஈரோடு, பெருந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ரமணிகாந்தன், ஆய்வாளர் பாலசுந்தரி, தக்கார் சீனிவாசன் மற்றும் கோயில் கமிட்டியினர் செய்திருந்தனர்.
அதேபோல, நம்பியூரில் தான்தோன்றி ஈஸ்வரர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா நடந்தது.

× RELATED கிரகங்கள் தரும் யோகங்கள் - ராகு - கேது, சனி சேர்க்கை என்ன செய்யும்?