ரயில்வே பிளாட்பார பகுதியில் பேட்டரி கார் வசதி செய்து தர கோரிக்கை

ஈரோடு, பிப். 15: ரயில் நிலைய பிளாட்பார பகுதிகளில் பேட்டரி கார் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட தெற்கு ரயில்வே மேலாளருக்கு  ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத்துறை துணை தலைவர் பாட்சா அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:ஈரோடு ரயில் நிலையத்தில் 4 பிளாட்பாரம் உள்ளது. இதன் வழியாக, தினமும் 150க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கிறது. ஒவ்வொரு ரயிலிலும் சுமார் 20 முதல் 24 பெட்டிகள் உள்ளன. மாற்றுதிறனாளிகள், வயது முதிர்ந்த ஆண்கள், பெண்கள் ரயில் பயணத்தில் ஏறி செல்வதற்கும், இறங்கி வருவதற்கும் வெகு தூரம் நடந்து வர சரமப்படுகின்றனர். சென்னை, சேலம், கோவை ஆகிய பகுதிகளில் இருப்பதுபோல் ஈரோடு ரயில்நிலைய பிளாட்பாரத்தில் பேட்டரியில் இயங்கும் கார் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் நிலைய நுழைவு வாயிலில் இருந்து லிப்ட் வரை செல்வதற்கு மட்டுமே பேட்டரியில் இயங்கும் கார் வசதி செய்யப்பட்டுள்ளது.

பிளாட்பார பகுதிக்கும் பேட்டரி கார் வசதி செய்து தர வேண்டும். தெற்கு ரயில்வேயில் அதிக வருமானம் ஈட்டி தருவது ஈரோடு ரயில் நிலையம்தான்.
இந்த ரயில்நிலையத்தில் கோவை, சேலம் ரயில்நிலையத்தில் உள்ளது போல வசதி கிடையாது. ஈரோடு ரயில் நிலைய நுழைவாயில் முன்பு பயணிகள் ஓய்வு எடுப்பதற்காக ஒரு குளிர்சாதன அறை பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. இங்கு ஒருமணி நேரத்திற்கு 15 ரூபாய் கட்டணம் வசூல் செய்தனர். ஆனால், தற்போது அதை மூடிவிட்டனர். பயணிகள் பயன்பாட்டிற்காக இந்த அறையை மீண்டும் திறக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

× RELATED கேரளாவுக்கு பைக்கில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது