×

விவசாயிகள் சங்க கூட்டு இயக்கம் சார்பில் மாநாடு நடத்த முடிவு

ஈரோடு, பிப். 15: தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் பல்வேறு சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
அந்த இயக்கத்தின் தலைவர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தேர்தலில் போட்டியிடும் மாநில மற்றும் தேசிய கட்சிகள் ஓட்டு வாங்குவதற்காக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம். விவசாயத்திற்கு எதிரான திட்டங்களை தடுத்து நிறுத்துவோம் என வாக்குறுதி கொடுத்து வருகின்றனர். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளை கண்டுகொள்வதில்லை. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜ உடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு எங்களது கூட்டு இயக்கம் ஆதரவு கொடுக்காது.

விவசாயிகளின் ஆதரவு வேண்டும் என்றால் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் எடுக்கும் திட்டம், விவசாய நிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்கும் திட்டம் போன்ற விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை கைவிடுவோம் என்று எழுத்துபூர்வமாக வழங்கவேண்டும். மேலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் தமிழகத்தில் மாநாடு நடத்த உள்ளோம். ஆட்சி அதிகாரத்தில் விவசாயிகளுக்கும் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவோம். தேர்தலில் விவசாய சங்கத்தை சேர்ந்தவர்களை நிறுத்தி அவர்களுக்கு அனைத்து கட்சிகளின் ஆதரவையும் கேட்போம். விவசாயிகளுக்கு எதிரான கூட்டணியை எதிர்த்து பிரசாரம் மேற்கொள்வோம்.இவ்வாறு தெய்வசிகாமணி கூறினார்.

Tags : farmers union ,conference ,
× RELATED தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்