பவானி ஆற்றில் மீண்டும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு

பவானி, பிப். 15: பவானி ஆற்றில் மீண்டும் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 கடந்த ஆண்டு பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பவானி காலிங்கராயன் அணைக்கட்டு முதல் கூடுதுறை வரை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், பவானி ஆறு பளிச்சென்று காணப்பட்டது.

இதனால், மீனவர்கள் பரிசலைக் கொண்டு ஆற்றில் மீன்கள் பிடிக்கும் நிலை உருவானது. தற்போது ஆற்றில் அதிக அளவில் கழிவுகள் கலப்பதால் பவானி பழைய பஸ் நிலையம் பின்புறம் மீண்டும் ஆகாயத்தாமரை வளரத் துவங்கி உள்ளது. சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலை அளிக்கும் ஆகாயத்தாமரை கழிவுகள் கலந்த நீரில் மிக விரைவில் வளரும் தன்மையுடையவை.

 கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கரையோரத்தில் சிறிதளவு காணப்பட்ட நிலையில் தற்போது ஆகாயத்தாமரை பரவலாக வளர்ந்துள்ளது. ஆற்றில் தேங்கி உள்ள கழிவுநீரில் வேகமாக வளர்ந்து வருவதால் இவற்றை ஆரம்ப கட்டத்திலேயே அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த வெள்ளப்பெருக்கின்போது ஆகாயத்தாமரை சேர்ந்து பாலத்தில் தண்ணீர் செல்லாத வகையில் அடைத்துக் கொண்டதால் மழைவெள்ளம் வெளியேற முடியாமல் கரையோர வீடுகள், பழைய பஸ் நிலையம், பள்ளிகளுக்கு புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது. எனவே, ஆகாயத்தாமரை முற்றிலும் வளரும் முன்பே அகற்றுவதோடு சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: