கருங்கல்பாளையத்தில் மாடு வாங்க சந்தையில் குவிந்த பயனாளிகள்

ஈரோடு, பிப்.15: அரசின் இலவச மாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் கறவை மாடுகளை வாங்கி செல்லவதற்காக ஈரோட்டில் நேற்று நடந்த மாட்டு சந்தையில் ஏராளமான பயனாளிகள் வந்தனர்.

மாநிலத்தில் பால் உற்பத்தியை பெருக்கவும், கிராமப்புற பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தவும் தமிழக அரசின் கால்நடைத்துறை சார்பில் பெண்களுக்கு இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் நடக்கும் கால்நடை சந்தைகளில் கலந்துகொண்டு மாடுகளை வாங்கிக்கொள்ளலாம்.

இந்நிலையில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் நேற்று நடந்த மாட்டு சந்தையில் கால்நடைத்துறை சார்பில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்த வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பயனாளிகள், விற்பனைக்கு வந்த கறவை மாடுகளை வாங்கிச்சென்றனர்.

இது குறித்து மாட்டு சந்தை வியாபாரிகள் கூறியதாவது:

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடந்து வருகிறது. பசு மாடுகள், எருமைகள், வளர்ப்பு கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மாடுகளை வாங்கி செல்வதற்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகின்றனர்.  நேற்று நடந்த சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வழக்கம் போல் வந்த போதிலும் கால்நடைதுறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பெண்களுக்கான இலவச மாடுகள் வழங்கும் திட்டத்திற்காக மாடுகளை வாங்குவதற்காக தேனி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மாடுகளை வாங்கிச்சென்றனர்.

சந்தையில் 500 பசு மாடுகள், 400 எருமைகள், 250 வளர்ப்பு கன்றுகள் விற்பனைக்கு வந்தன. பசுமாடு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.32 ஆயிரம் வரையிலும், எருமைகள் ரூ.36 ஆயிரம் வரையிலும், வளர்ப்பு கன்றுகள் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரையிலும் விலை போனது.இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Related Stories: