கிணற்றில் விவசாயி சிக்கி தவிப்பு

வெள்ளகோவில், பிப். 15: வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் வள்ளியிரச்சல் பொன்முடியான் தோட்டத்தை சேர்ந்தவர் சாந்தகுமார் (52). விவசாயி. இவருடைய தோட்டத்தில் 60 அடி ஆழமுள்ள ஒரு கிணறு உள்ளது. இதில் 40 அடி உயரத்துக்கு தண்ணீர் இருந்தது. இந்தக் கிணற்றில் ஏராளமான கெண்டை, கெழுத்தி, அயிரை மீன்கள் இருக்கின்றன. இவற்றில் நூற்றுக்கணக்கான மீன்கள் திடீரென இறந்து மிதந்ததால், கிணற்றுத் தண்ணீர் துர்நாற்றம் வீசியது. இதனால் தண்ணீரைப் பயன்படுத்த முடியவில்லை.  தண்ணீரில் மிதந்த மீன்களை அப்புறப்படுத்த வியாழக்கிழமை கயிறு கட்டி படிகளில்லாத அந்தக் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். அப்போது அவருக்கு மயக்கம் வருவது போல் இருந்துள்ளது. அவரால் கிணற்றிலிருந்து மேலே வர முடியவில்லை. கிணற்றுச் சுவரைப் பிடித்துக் கொண்டு பரிதவித்துள்ளார். தகவலறிந்து வந்த வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் தனசேகரன் தலைமையிலான தீயணைப்புப் படையினர் விவசாயி சாந்தகுமாரை கயிறு மூலம் உயிருடன் மீட்டனர். விவசாயி உயிரைக் காப்பாற்றிய தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

Related Stories: