பழங்கால சிற்பங்களை பாதுகாக்க பயிற்சி முகாம்

ஊட்டி, பிப். 15: ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் உள்ள பழங்கால சிற்பங்கள், ஓலைசுவடிகள் போன்றவற்றை பதப்படுத்தி பாதுகாக்க, அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை மாணவ,மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
 ஊட்டி அரசு கலைக்கல்லூாி அருகே கல் பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு முதல் அரசு அருங்காட்சியகம் செயல்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில் கோத்தர், தோடர், குறும்பர், பனியர் போன்ற பழங்குடியின மக்கள் வசித்த வீடுகளின் மாதிரி மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளது.  அதேபோல் நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரியத்தை உணர்த்தும் அரிய வகை புகைப்படங்கள், ஓவியங்கள், பழங்காலத்து சிலைகள், பழங்கால நாணயங்கள், இசைக்கருவிகள், வன விலங்குகள், பறவைகளின் பதப்படுத்தப்பட்ட மாதிாிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
 மேலும், ஓலை சுவடிகள், பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேகரிக்கப்பட்ட கனிமங்கள், புதைப்படிவங்கள், கல்மரம், மரசிற்பங்கள் போன்றவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களை தூய்மைப்படுத்தி பாதுகாப்பது தொடர்பாக வரலாற்றுத்துறை மாணவ,மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாமின் போது அருங்காட்சியக காப்பாட்சியர் முருகவேல் மேற்பார்வையில் மாணவ,மாணவிகள் தூய்மை பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்த பயிற்சி முகாம் வரும் ஞாயிற்றுகிழமை வரை நடக்கிறது.
இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் முருகவேல் கூறுகையில், ‘‘அரசு அருங்காட்சியகத்தில் உள்ள பழங்கால சிற்பங்கள் காலநிலை மாற்றத்தால் சேதமடையாமல் இருக்க அவற்றை பதப்படுத்தி பாதுகாக்கும் பயிற்சி வரலாற்றுத்துறை மாணவ,மாணவிகளுக்கு அளிக்கப்படுகிறது’ என்றார்.

× RELATED கோடைகால பயிற்சி முகாம் நிறைவு