ரேஷன் கடைகளில் மலிவு விலை துணி பைகளை விற்க வேண்டும்

கோவை,பிப்.15: பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக உள்ள துணிப்பைகளை ரேஷன் கடைகளில் மலிவு விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என்று வணிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணி பைகளை உபயோகிக்க அரசு வலியுறுத்தி வருகிறது.

 இந்நிலையில், தடையை மீறி பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்பவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். பிளாஸ்டிக் பைகளை கடைகளில் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மலிவு விலை துணி பைகளை விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

 இதுகுறித்து இந்த அமைப்பின் மாவட்ட தலைவர் இருதயராஜா கூறியதாவது: பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் அதற்கான மாற்று வழியை முறைப்படுத்தி கொடுப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். பிளாஸ்டிக் பை ரூ.1க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், துணிப்பை ரூ.7ஆக உள்ளது.இதனால் பொதுமக்களும் வியாபாரிகளும் சிரமமடைந்து வருகின்றனர். இந்த பிரச்னையை தீர்க்கும் பொருட்டு தமிழக அரசு மலிவு விலையில் துணி பைகளை விற்பனை செய்ய முன்வர வேண்டும். மலிவு விலை பைகளை ரேஷன் கடைகளிலேயே விற்பனை செய்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.சிறு வணிகர்கள் நடத்தும் கடைகளில் அதிகாரிகள் சோதனையிட்டு பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்கின்றனர். ஆனால் பன்னாட்டு நிறுவனங்களின் பிளாஸ்டிக்கால் பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்வது இல்லை. இவ்வாறு இருதயராஜா கூறினார்.

Related Stories: