×

வெள்ளக்கோவில் விற்பனைக்கூடத்தில் ரூ.12 லட்சத்து 93 ஆயிரத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம்

வெள்ளக்கோவில், பிப். 15: சூரியகாந்தி விதை சீசன் துவங்கியதையடுத்து 3 மாதங்களுக்கு பிறகு நேற்று வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் சூரியகாந்தி ஏலம் நடந்தது.
கரூர், திருச்சி, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளை சேர்ந்த 21 விவசாயிகள்,  693 மூட்டை சூரியகாந்தி விதைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
மொத்தம் 34 ஆயிரத்து 282 கிலோ எடை கொண்ட சூரியகாந்தி விதைகள் 12 லட்சத்து 92 ஆயிரத்து 947 ரூபாய்க்கு ஏலம் நடந்தது. திருப்பூர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் 9 பேர் ஏலத்தில் பங்கேற்றனர். விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மாரியப்பன் முன்னிலையில் நடந்த ஏலத்தில் தரமான சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ஒரு கிலோ 40 ரூபாய் 79 காசுக்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 35 ரூபாய் 82 காசுக்கும் ஏலம் நடந்தது.  கடந்த வருடம் அக் 25ம் தேதி நடந்த சூரியகாந்தி விதை ஏலம் சீசன் இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது சீசன் துவங்கியதால் நேற்று சூரியகாந்தி விதை ஏலம் நடந்தது. தொடர்ந்து பிரதிவாரம் வியாழக்கிழமை சூரியகாந்தி ஏலம் நடைபெறும் என  விற்பனைக்கூட அலுவலர் தெரிவித்தார்.

Tags : Sunflower Seed Auction ,
× RELATED ரூ.7.74 லட்சத்திற்கு சூரியகாந்தி விதை ஏலம்