புதிதாக நடவு செய்யப்பட்ட தென்னங்கன்றுகளை பாதுகாக்கும் விவசாயிகள்

பொள்ளாச்சி, பிப். 15:   பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில், புதிதாக நடவு செய்யப்பட்ட தென்னங்கன்றுகளை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க விவசாயிகள் தென்னங்கன்றுகளை சுற்றிலும் தென்னை ஓலைகளை வைத்துள்ளனர்.

பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஒடையக்குளம், சேத்துமடை, ஆத்துப்பொள்ளாச்சி, அம்பராம்பாளையம், சமத்தூர், தொண்டாமுத்தூர், கோபாலபுரம், கோட்டூர், ஆழியார், கோமங்கலம், நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகமாக உள்ளது. இங்குள்ள தென்னை மரங்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் பருவமழையே முக்கிய நீராதாரமாக உள்ளது. தற்போது மழை பெய்யாததால், கிணற்று நீர், போர்வெல் மற்றும் பிஏபி திட்டத்தில் உள்ள ஆழியார் அணை பாசனத்தை கொண்டு தென்னைகளை செழிப்படையை செய்கின்றனர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகரித்து கொண்டே சென்றது. கடந்த 2017ம்  ஆண்டில் தென்மேற்கு பருவமழை என்பது குறிப்பிட்ட நாட்களே பெய்துள்ளது. பின் கடந்த 2018ம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை மழை பெய்ததால், விளை நிலங்களில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, பல்வேறு கிராமங்கில் முதிர்ந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்தி புதிய தென்னங்கன்றுகளை நடவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
Advertising
Advertising

  இதில் புளியம்பட்டி, நெகமம், வடக்கிபாளையம், தொண்டாமுத்தூர், ராமபட்டிணம், கோபாலபுரம் உள்ளிட்ட பல இடங்களில் சில வாரத்திற்கு முன்பு நடவு செய்யப்பட்ட  தென்னங்கன்றுகள் முளைத்து வளர்ச்சியடைந்து வருகிறது. இருப்பினும் கோடை காலம் தொடங்கியுள்ளதால், வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்காகவும், பசுமை மாறாமல் இருப்பதற்கு தென்னங்கன்றுகளை சுற்றிலும் தென்னை ஓலைகளை வைத்துள்ளனர்.

   இந்த தென்னங்கன்றுகளுக்கு சொட்டுநீர் பாசனம் மேற்கொள்ளப்படுகிறது.  இந்த தென்னங்கன்றுகள் நல்ல வளர்ச்சியடைவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், அடுத்து கோடை மழை அல்லது தென்மேற்கு பருவமழை பொழிவு இருக்கும் வரை, தென்னங்கன்றுகளை பாதுகாத்துக்கொள்ள, அதனை சுற்றிலும்  ஓலைகளை மறைத்து வைத்து பாதுகாக்கப்படுவது தொடரும் என தென்னை விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: