×

பொக்காபுரம், சோலூரில் மக்கள் தொடர்பு முகாம்

ஊட்டி, பிப். 15: ஊட்டி அருகேயுள்ள பொக்காபுரம், சோலூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 278 பயனாளிகளுக்கு ரூ.20.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.அப்போது, மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது: சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2017-18 நிதியாண்டில் ரூ.2.74 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டது. இதில், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பில் 318 வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. வீடு கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு வீடு கட்டாமல் உள்ள பயனாளிகள் வீடுகள் கட்ட குழுக்கள் அமைத்து அதன் மூலம் நிதி திரட்டி பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தலா ஒரு வீட்டிற்கு ரூ.50 ஆயிரம் வீதம் 64 வீடுகள் பழுது பார்க்கும் பணி தற்போது நடக்கிறது. அதேபோல், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பிடம் கட்ட பேரூராட்சிகளில் ரூ.8 ஆயிரமும், ஊராட்சிகளில் ரூ.12 ஆயிரமும் அரசு வழங்குகிறது. இதனை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 5 ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் உள்ள விவசாயிகளுக்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு மானியம் வழங்குகிறது.  எனவே இத்திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு இன்னசென்ட் திவ்யா பேசினார்.  

இதைத்தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செவிலியர் பயிற்சி பெறும் மாணவிகள் 20 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சம் நிதி வழங்கப்பட்டது. அதேபோல், பொக்காபுரம் மாரியம்மன் இயற்கை பண்ணை விவசாயிகள் சங்கத்திற்கு வீட்டுத்தோட்டம் அமைக்க மூன்றாம் கட்ட நிதி ரூ.2 லட்சத்திற்கான காசோலையும், ரூ.5 லட்சம் மதிப்பில் மிக்சர் இயந்திரம் மற்றும் செங்கல் அச்சு இயந்திரமும் வழங்கப்பட்டது. வாழை தோட்டம் ஸ்ரீஅய்யன் மாட்டுப்பண்ணை சங்கத்திற்கு 200 பயனாளிகளுக்கு ரூ.2.96 லட்சத்தில் தேனீ பெட்டிகளும், தோட்டக்கலைத்துறை சார்பில் சோலூர் கிராமத்தை சார்ந்த 10 பழங்குடியினருக்கு ரூ.2.12 லட்சம் மதிப்பில் விதைகள் வழங்கப்பட்டது.

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 15 பேருக்கு முதியோர் உதவித்தொகை மாதந்தோறும் ரூ. ஆயிரம் வீதம் பெறுவதற்கான ஆணை, 20 பேருக்கு பழங்குடியின நலவாரிய அட்டைகள், 5 பேருக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் உட்பட மொத்தம் 278 பயனாளிகளுக்கு ரூ.20.14 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னதாக உல்லத்தி ஊராட்சியில் கல்லட்டி முதல் சோலூர் வரை ரூ.114 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை பணியினை கலெக்டர் இன்னசென்ட்திவ்யா ஆய்வு செய்தார். இதில் ஊட்டி ஆர்.டி.ஒ., சுரேஷ், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிவேலன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : contact camp ,Pokkoor ,Solapur ,
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...