கட்டிடத்திற்கு சீல் வைக்க சென்ற அதிகாரிகள் முற்றுகை

ஊட்டியில் பரபரப்பு
ஊட்டி, பிப். 15: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மெயின் பஜார் பகுதியில் விதிமுறை மீறிய கட்டிடத்திற்கு சீல் வைக்க சென்ற அதிகாரிகளை  கட்டிட உரிமையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிமுறை மீறிய கட்டிடங்கள் ஏராளமாக உள்ளன. இவைகளை கண்டறிந்து தற்போது சீல் வைக்கும் பணிகளை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த வாரம் முதல் இதுவரை 21 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இவைகளில் வணிக ரீதியான கட்டிடங்கள் மட்டுமின்றி, குடியிருப்புகளும் அடங்கும். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் ஊட்டி மெயின் பஜார் பகுதியில் உள்ள ஒரு விதிமுறை மீறிய கட்டிடத்திற்கு சீல் வைக்கும் பணிகளை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். அந்த கட்டிடம், குடியிருப்பிற்கான அனுமதி பெற்று வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்டதால் சீல் வைக்கப்பட்டது. மேலும், அதே கட்டிடத்தில் விதிமுறைகளை மீறி இரண்டாவது மற்றும் மூன்றவாது மாடியும் கட்டியுள்ளனர். மூன்றாவது மாடியை இடிக்க நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.

 அப்போது, கட்டிட உரிமையாளர்கள் அவகாசம் கேட்டுள்ளனர். அதற்கு நகராட்சி அதிகாரிகளும் சம்மதித்தனர். மேலும், இரண்டாவது கட்டிடத்திற்கு சீல் வைக்க சென்ற போது, அதில் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்ள  அவகாசம் கேட்டுள்ளனர். நேற்றுடன் அதற்கான கால அவகாம் முடிந்த நிலையில், அந்த கட்டிடடத்திற்கு சீல் வைக்க நகராட்சி அதிகாரிகள் நேற்று சென்றனர். ஆனால், அதிகாரிகளை கட்டிடத்தின் அருகில் நெருங்கவிடாமல் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து கட்டிட உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், இரு நாட்களுக்குள் கட்டிடத்தில் உள்ள பொருட்களை அகற்றிவிடுவதாக உரிமையாளர்கள் தெரிவித்ததை தொடர்ந்து, அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

× RELATED மதுராந்தகத்தில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை