×

திருவாரூரில் ரூ.40 லட்சத்தில் அமைக்கப்பட்டு பராமரிப்பில்லாத நவீன எரிவாயு தகன மேடை

திருவாரூர், பிப்.15:   திருவாரூரில் ரூ.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு பராமரிப்பில்லாத நவீன எரிவாயு தகன மேடையினை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 30 வார்டுகளை கொண்ட திருவாரூர் நகராட்சி பகுதியில் கடந்த 2011 கணக்கெடுப்பின்படி சுமார் 15 ஆயிரம் குடியிருப்புகளில் 54 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த எண்ணிக்கையானது தற்போது உயர்ந்துள்ள நிலையில் நகரில் உள்ள 10க்கும் மேற்பட்ட வார்டுகளில் வசிப்பவர்களுக்கு நகரின் நெய்விளக்கு தோப்பில் உள்ள சுடுகாடு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் மழை காலங்களில் விறகு மற்றும் வரட்டிகள் தட்டுபாடு ஏற்படும் நிலையில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய பொதுமக்கள் மிகவும் துன்பப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.40 லட்சம் மதிப்பில் இதே சுடுகாட்டின் ஒரு பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் நவீன எரிவாயு தகன மேடை ஒன்று அமைக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட தகனமேடைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிப்பது, எப்படி பராமரிப்பது போன்ற பல்வேறு காரணங்களினால்  பணிகள் முடிந்தும் சுமார் 2 ஆண்டு காலம் வரையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுக்கு முன்னர் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டாத நிலையில் இதனை பராமரிக்கும் பணியினை நகராட்சி நிர்வாகமானது கோவையை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்துள்ளது. அதன்படி நபர் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் கட்டணமாக பெறப்படும் நிலையில் அதில் நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.100 மட்டும் பங்கு தொகையாக செலுத்தப்பட்டு வருகிறது.  இருப்பினும் இந்த தகன மேடையானது தற்போது சரிவர பராமரிக்கப்படாததன் காரணமாக  இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு சரிவர இடம் கிடைக்காததால் இதனை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tiruvarur ,
× RELATED 3 ஆண்டாக உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பு பருத்திக்கு நல்ல விலை கிடைக்கிறது