×

நெல் தரிசு, உளுந்து பயிரில் ஏற்படும் புரோடினியா புழு, மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை வேளாண் பேராசிரியர்கள் ஆலோசனை

மன்னார்குடி, பிப்.15:  நெல் தரிசில் உளுந்து பயிரில் புரோடினியா புழு மற்றும் மஞ்சள் தேமல் நோயினை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் பேராசிரியர்கள் வழிகாட்டுதல் வழங்கியுள்ளனர்.
 தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் ராஜா, ரமேஷ், பாஸ்கரன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நெல் தரிசு, உளுந்து மற்றும் பச்சை பயிர்களில் புரோடினியா  புழுவானது அதிக அளவில் சேதத்தை உண்டாக்குவதால் மகசூல் பாதிப்படைகிறது. இப்புழுவானது இலைகளையும், பூ மொட்டுகளையும், காய்களையும் தின்று சேதப்படுத்தும். இப்புழுவின் தாக்குதல் இரவு நேரங்களில் அதிகம் காணப்படும். பகல் நேரத்தில் புழுக்களானது மண் வெடிப்புகளிலும், சருகுகளின் அடியிலும் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிரின் அடித்தூர்களின் பதுங்கி இருக்கும். இதன் அந்துப்பூச்சியின் முன் இறக்கை பழுப்பு நிறமாகவும், வெள்ளை நிற கோடுகளுடனும், பின் இறக்கை பழுப்பு நிறமாகவும், பழுப்பு நிறத்திட்டுகளுடனும் காணப்படும். ஒரு பெண் அந்துப்பூச்சி 200 முதல் 300 முட்டைகள் வரை இலைகளின் மேற்பரப்பில் குவியலாக இட்டு தன் உடம்பில் செதில்களால் முடி வைத்திருக்கும். இப்பூச்சியின் முட்டை குவியலையும், முட்டையில் இருந்து பொரித்து கூட்டமாக மேயும் வளர்நிலை புழுக்களையும் சேகரித்து அழித்திட வேண்டும். இப்பூச்சியினை அழிக்க வீட்டிலுள்ள ஊதா அல்லது கறுப்பு நிற துணிகள் அல்லது கிழிந்த சாக்கை சிறு சிறு துண்டாக வெட்டி காலை வேளையில் ஆங்காங்கே வைக்கும்போது புரோடினியா புழுக்கள் இருட்டை தேடி இத்துணிக்குள் வந்தடையும். அப்போது புழுக்களை சேகரித்து அழிக்கலாம். இப்பூச்சியின் தாக்குதல் அதிகமாகும்போது குளோர் பைரிபாஸ் 20 இசி 500 மிலி அல்லது டைகுளோர்வாஸ் 76 டப்பிள்யூ எஸ் சி 400 மிலி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் தெளித்து இப்பூச்சியினை கட்டுப்படுத்தலாம். உளுந்தில் மஞ்சள் தேமல் நோய்:    நெற்பயிரை தொடர்ந்து சாகுபடி செய்யப்படும் உளுந்தில் மஞ்சள் தேமல் நோயின் தாக்குதல் பரவலாக காணப்படும். இந்நோய் வெள்ளை ஈக்கள் மூலம் பரவும் ஒரு வகை நச்சுயிரி நோயாகும். இளம் இலைகளில் மஞ்சள் நிறப்புள்ளிகள் முதலில் தோன்ற ஆரம்பிக்கும். புதியதாக தோன்றும் இலைகளில் மஞ்சள் மற்றும் பச்சை நிறத் திட்டுக்கள் மாறி மாறி காணப்படும். பயிர்களானது வளர்ச்சியின்றி குட்டையாக காணப்படும். இவற்றின் தாக்குதலால் மிகக் குறைந்த பூக்கள் மற்றும் காய்களை மட்டுமே உற்பத்தியாவதால் மகசூல் இழப்பு ஏற்படும். இந்நோயை கட்டுப்படுத்த விதைகளை இமிடாகுலோபிரிடு 5 மிலி மருந்தினை 1 கிலோ விதைக்கு என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். வயல் வரப்புகளில் சோளப்பயிரை வரப்பு பயிராக வளர்த்து அதில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம். இந்நோய் தாக்கப்பட்ட செடியினை கண்டவுடன் பிடுங்கி எரித்து விட வேண்டும். 1 ஏக்கருக்கு டைமீத்தோயேட் 300 மிலி அல்லது தயாமித்தாக்சாம் 50 கிராம் மருந்தினை தெளித்தும் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : farm professors ,
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்