×

லால்குடி அருகே துணை மின்நிலையம் அமைக்கும் பணி மின்கம்பங்கள் அமைக்க பனை மரங்கள் அழிப்பு மக்கள் எதிர்ப்பு

லால்குடி, பிப்.15:  லால்குடி அடுத்த எல்.அபிஷேகபுரத்தில் துணை மின்நிலையம் அமைக்கும் பணிக்கு மின்கம்பங்கள் நடுவதற்காக சாலையோரம் உள்ள 200 பனை மரங்களை வெட்டி அழிப்பதால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளனர்.திருச்சி மாவட்டம், லால்குடி எல்.அபிஷேகபுரத்தில் துணை மின்நிலையமும், மின்சாரத்துறை அலுவலகமும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. துணை மின் நிலையத்திற்கு கூகூர் - லால்குடி சாலையோரத்தில் மின் கம்பங்கள் நடப்பட்டு வருகிறது. இதனால் சாலையோரம் உள்ள 200க்கும் மேற்பட்ட 50 ஆண்டுகள் பழமையான பனை மரங்களும், மற்றும் சாலையோரம் புதிதாக வைக்கப்பட்டுள்ள புங்கன், வேம்பு, பூசனம், அரசன் மரங்களும் வேரோடு வெட்டி அழித்து மின்கம்பங்கள் நடப்பட்டு வருகிறது. மேலும் கூகூர் - கிளிக்கூடு இடையே கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலமோ அல்லது மேம்பாலம் அமைக்க லால்குடி பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கொள்ளிடம் ஆற்றின் இடையே பாலம் அமைக்கப்பட்டால் கூகூர் - லால்குடி சாலையும் அகலப்படுத்தப்படும். இதனால் தற்போது நட்டு வரும் மின்கம்பங்கள் அகற்றப்பட்டு வேறு இடத்தில் மாற்றி அமைக்கும் சூழ்நிலை உருவாகும்.  கூகூர் - லால்குடி சாலையின் இருபுறங்களிலும் 10 அடி அகலத்தில் பாசன வாய்க்கால் உள்ளதால் பனை மரங்களையும், புதிதாக நட்டுள்ள மரங்களையும் அழிக்காமல் வாய்க்கால் கரையை தாண்டி மின்கம்பங்கள் அமைத்தால் எதிர்காலத்தில் சாலை விரிவாக்கம் செய்யும்போதும், விவசாயிகளுக்கு மின்கம்பங்களில் மின் இணைப்பு பெற்று விவசாயம் செய்ய
உதவியாக இருக்கும். எனவே தற்போது சாலையோரத்தில் நடப்பட்டுள்ள மின் கம்பங்களை உடனடியாக அகற்றி சாலையோரத்தில் உள்ள மரங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வாய்க்கால் கரைகளில் மின் கம்பங்களை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Tags : sub-station ,residents ,Lalgudi ,
× RELATED ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை