×

தொட்டியம் அருகே சம்பவம் கடனை கேட்டு போனில் மிரட்டியதால் கூலி தொழிலாளி மனைவி தற்கொலை

தொட்டியம்,  பிப்.15:  தொட்டியம்  அடுத்த மின்னத்தம்பட்டியில் கடன் கொடுத்தவர் பண த்தை திருப்பி கேட்டு மிரட்டல் விடுத்ததால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.   தொட்டியம் அடுத்துள்ள  மின்னத்தம்பட்டியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. போர்வெல் லாரியில்  கூலி தொழிலாளியாக  வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கலா (23).  இவர்களுக்கு திருமணம் நடைபெற்று மூன்று வருடங்கள் ஆகிறது. இரண்டு வயதில்  ஆண்குழந்தை உள்ளது. நாமக்கல்லில் லாரி உரிமையாளர் ராஜீவ்காந்தி பணம் பெற்றிருந்ததாகவும், பணத்தை கேட்டு போனில் நேற்று லாரி உரிமையாளர்  தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதனால்  மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கலா நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது  மின்விசிறியில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து காட்டுப்புத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல்  கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி  முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை  மேற்கொண்டுள்ளனர். ஆட்டோவை மறித்து டிரைவர் மீது தாக்குதல் : திருச்சி உறையூரை  சேர்ந்தவர் அழகர்சாமி(32), ஆட்டோ டிரைவர். இவர் நேற்றுமுன்தினம் காலை 11 மணிக்கு  சவாரி சென்று விட்டு நெசவாளர் திருமண மண்டபம் அருகே வந்து கொண்டிருந்தார்.  அப்போது 5 பேர் ஆட்டோவை நிறுத்தினர். சவாரிக்கு நிறுத்துகிறார்கள் என  கருதிய அழகர்சாமி ஆட்டோவை ஓரம் கட்டினார். அப்போது திடீரென அந்த 5  வாலிபர்களும் கட்டையால் ஆட்டோவை அடித்து உடைத்து சூறையாடினர்.இதை  தடுக்க முயன்ற டிரைவர் அழகர்சாமியையும் சரமாரி தாக்கினர். இதில் அவர்  பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே  பகுதியை சேர்ந்த விக்னேஷ்(25), பிரகாஷ், கோபால் ஆகிய 3 பேரை கைது  செய்தனர். மணிகண்டன் என்ற பெயருள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.  முன்விரோதம்  காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.வாகனம் மோதி கொத்தனார் பலி: திருச்சி திருவெறும்பூர் பகுதியில் கல்லணை கால்வாய் மற்றும் வெண்ணாற்றில் இருந்து இரண்டு சக்கர வாகனம் முதல் டாரஸ் லாரிகள் வரை மணல் திருட்டு நடக்கிறது. இதனை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அரசங்குடி பகுதியில் இருந்து திருட்டு மணல் ஏற்றி வந்த லோடு ஆட்டோ ஒன்று கூத்தைப்பார் சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் காயமடைந்தவரை அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் காயமடைந்தவர் திருவெறும்பூர் அருகே உள்ள நடராஜபுரம் கச்சேந்தி மலைப்பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(48). கொத்தனார் என்பதும், இவர் இயற்கை உபாதைக்கு ஒதுங்கியபோது விபத்து நடந்ததும் தெரியவந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். திருவெறும்பூர் போலீசார்
விசாரிக்கின்றனர்.

வாலிபரிடம் செயின் பறித்த 2 பேர் கைது : புதுக்கோட்டை  மாவட்டம் ஆலங்குடி அருகே குளவாய்பட்டியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவர்  சென்னை செல்வதற்காக நேற்றுமுன்தினம் இரவு திருச்சி மத்திய
பஸ் நிலையம் வந்தார். அங்கு சென்னை பஸ்கள் நிற்கும் இடத்தில் நின்றிருந்தபோது அருகில் நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் சந்தோஷ்குமாரிடமிருந்து ஒன்றரை பவுன் செயினை பறித்துக்கொண்டு ஓடினர். இதனைப் பார்த்த பொதுமக்கள் இருவரையும் விரட்டி பிடித்து  கன்டோன்மென்ட் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த முத்துகுமார் மகன் கிஷோர்(23), பறவைகள் சாலையை  சேர்ந்த பரமசிவன் மகன் பாரதி (30) என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது  செய்து சிறையிலடைத்தனர்.மனைவியை தாக்கிய கணவர் கைது:திருச்சி பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை மணியம்மை தெருவை சேர்ந்தவர்  தீபா (35). இவரது கணவர் சுரேஷ் (33). இவர் மாட்டு தரகு வியாபாரம் செய்து வருகிறார். இருவருக்கும் திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் சுரேஷ் கடந்த 31.1.2019 அன்று மது போதையில் வந்து மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் தீபாவை கையால் அடித்து அருகிலிருந்த இரும்புக் கட்டிலில் தள்ளி விட்டார். இதனால் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிகிச்சைக்காக தீபா திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த அவருக்கு வயிற்று பகுதியில்  வலி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அதன் பிறகு மீண்டும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தீபா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் சுரேஷை கைது செய்து
சிறையில் அடைத்தனர்.

Tags : wage worker ,suicide ,incident ,Tontium ,
× RELATED ஈடி அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம்...