நாடாளுமன்றத் தேர்தல் பணிக்கு 7500 ஆசிரியர்கள், அலுவலர்கள் தயார்

தூத்துக்குடி, பிப். 15:  தூத்துக்குடி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணிக்காக 7,500 அலுவலர்கள், ஆசிரியர்கள் தயாராக இருப்பதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.  நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும்நிலையில் இத்தேர்தலில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் நிலை அலுவலர்களுக்கு பயிற்சியளிப்பது, வாக்குச்சாவடி அமைப்பது மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி அளவிலான முதன்மை பயிற்சியாளர்களுக்கு சிறப்பு பயிற்சியளிக்கும் முகாம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தலைமை வகித்த கலெக்டர் சந்தீப்நந்தூரி முன்னிலை வகித்த  டி.ஆர்.ஓ. வீரப்பன் முக்கிய ஆலோசனைகள் வழங்கினர். பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறுகையில், ‘‘தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்திலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகள் துவங்கியுள்ளன.  முதற்கட்டமாக தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அளவிலான அதிகாரிகள் ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றினால் இடமாற்றம் செய்யப்படும் பணி நடந்துவருகிறது. மேலும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குப்பதிவு செய்வது குறித்து அனைத்து வாக்குச்சாவடி அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடத்தப்பட்டு வருகிறது.

இதற்காக 36 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் 1593 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் பணியாற்ற வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் 3 நிலை அலுவலர்கள் என 7500 ஆசிரியர்கள், அலுவலர்கள் தயாராக உள்ளனர்’’ என்றார்.
தேர்தலுக்கு முன் நலத்திட்ட உதவிவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம்  வழங்குவதற்கான கணக்கு எடுக்கும்பணி மாநிலம் முழுவதும் நடந்தது.  இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்  குறித்து  கணக்கு எடுக்கும்பணி துரிதமாக நடந்து வருகிறது. இதேபோல் மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும்பொருட்டு 2 ஹெக்டேர் நிலத்திற்கு கீழ் உள்ளவர்களை கணக்கு எடுக்கும் பணியும் நடந்து வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையில் பணிகள் துரிதமாக நடந்து வருவதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

× RELATED தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு...