×

கோவில்பட்டி நகராட்சியை சமூகநீதி கூட்டமைப்பு முற்றுகை

கோவில்பட்டி, பிப். 15:  கோவில்பட்டியில் காலணி தைக்கும் தொழிலாளர்களுக்கு தொழில் நடத்துவதற்கு இடம் ஒதுக்கக்கோரி சமூக நீதி கூட்டமைப்பினர், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
கோவில்பட்டி நகரில் 50க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் காலணி தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொழிலாளர்கள் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், அரசு அலுவலகங்கள், வங்கிகள் போன்ற பகுதிகளில் மேற்கூரை வசதியில்லாமல் வெயில், மழையிலும் சிரமத்துடன் தொழில் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தாழ்த்தப்பட்ட மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் இந்த தொழிலாளர்களின் நலன் கருதி இவர்களுக்கு உரிய கருவிகள் கிடைக்கவும், வாடகையின்றி பேருந்து நிலையம் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடம் ஒதுக்கீடு செய்து தொழில் நடத்துவதற்கு நிழலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தை சமூகநீதி கூட்டமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கூட்டமைப்பு தலைவர் மேரிஷீலா, செயலாளர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் ஐஎன்டியுசி மாவட்ட துணை தலைவர் தமிழரசன், பொதுச்செயலாளர் ராஜசேகர், அண்ணா தொழிற்சங்க தாலுகா செயலாளர் ராமகிருஷ்ணன், ஐந்தாவது தூண் அமைப்பு நிறுவனர் சங்கரலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து கூட்டமைப்பினர், கோரிக்கை மனுவை நகராட்சி கமிஷனர் அச்சையாவிடம் அளித்தனர். மனுவை பெற்று கொண்ட அவர், நடவடிக்கை எடுப் பதாக தெரிவித்தார்.

Tags : Siege of Social Justice Federation ,Kovilpatti Municipality ,
× RELATED அரசியல் லாபத்துக்காக பாஜ கவுன்சிலர் பொய் புகார்