×

நெல்லையில் நீண்ட இடைவெளிக்கு பின் 3 கல்வி மாவட்ட அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன

நெல்லை, பிப். 15: நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், சேரன்மகாதேவி, சங்கரன்கோவில் கல்வி மாவட்ட அலுவலர் பணியிடங்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நிரப்பப்பட்டன.
கல்வித்துறையில் இந்த கல்வியாண்டு தொடக்கத்தில் பல மாறுதல்கள் செய்யப்பட்டன. இதன்படி மெட்ரிக் இன்ஸ்பெக்டர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் அகற்றப்பட்டன.  கூடுதலாக கல்வி மாவட்ட அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இதன்படி நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே இருந்த நெல்லை, தென்காசி, சேரன்மகாதேவி கல்வி மாவட்டங்களுடன் புதிதாக வள்ளியூர், சங்கரன்கோவில் கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.இதுபோல் எஸ்எஸ்ஏ, ஆர்எம்எஸ்ஏ திட்ட பிரிவுகளும் ஒன்றாக்கப்பட்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் உருவாக்கப்பட்டது. புதிய கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட நிலையில் பல கல்வி மாவட்ட அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தன. நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், சேரன்மகாதேவி, சங்கரன்கோவில் பணியிடங்களுக்கு பொறுப்பு அலுவலர்களே கல்வி மாவட்ட அலுவலர்களாக இருந்தனர். அவர்கள் தங்களது பள்ளிகளின் தலைமையாசிரியர் பணியிடங்களையும் கவனிக்க வேண்டியிருந்தது. நீண்ட நாட்களாக காலியிடம் நீடித்தது. பொதுத்தேர்வு நெருங்கிவரும் நேரத்தில் உயர் அலுவலர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் இருந்துவந்தது.

இந்நிலையில் வள்ளியூர், சேரன்மகாதேவி, சங்கரன்கோவிலுக்கு புதிய கல்வி மாவட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்., இதன்படி குமரி மாவட்டம் ஈத்தாமொழி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விஜயலெட்சுமி வள்ளியூர் கல்வி மாவட்ட அலுவலராக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளார். கட்டளைகுடியிருப்பு அரசு பள்ளி தலைமையாசிரியர் சுடலை உதவி உயர்வு பெற்று சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல் வில்லிபுத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் சம்பத்குமார் இடமாறுதல் மூலம் சங்கரன்கோவில் கல்வி மாவட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் உடனடியாக தங்களது புதிய பணியிடங்களில் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 கல்வி மாவட்டங்களுக்கும் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி